உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கு தீர்ப்பில் கொண்டாட்டம், ராஜ்யசபா எம்.பி பதவி குறித்த சர்ச்சை, பாலியல் வழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.  


பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 40 நாட்கள் தொடர் வாதங்கள் நடைபெற்று, அதன்பின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5  நீதிபதிகள் கொண்ட அமர்வால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று வழக்கின் அமர்வில் இருந்த நீதிபதிகள் அனைவரையும்  இரவு விருந்துக்கு தாஜ்மன்சிங் ஹோட்டலுக்கு அழைத்து சென்றதாக ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனத் சுயசரிதை புத்தமான ‘ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ்’ என்ற புத்தகத்தில் இதை தெரிவித்துள்ளார். “நாங்கள் சீன உணவுகளை சாப்பிட்டோம், அங்கு கிடைக்கும் சிறந்த மதுபானங்களைப் பகிர்ந்து கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார். 




இதுகுறித்து என்டிடிவிக்கு ரஞ்சன் கோகாய் அளித்த பேட்டியின்போது அயோத்தி விவகாரம் தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சனையில் தீர்ப்பைக் கொண்டாடுவது சரியானதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி கோகோய், அது இரவு விருந்து; கொண்டாட்டம் அல்ல என்று மறுத்தார். “கொண்டாடவில்லை.. கொண்டாடவில்லை.. நண்பர்களுடன் இரவு உணவிற்குச் செல்லும்போது, சில சமயங்களில் வெளி உணவை சாப்பிடலாம் என்று தோன்றாதா? 


அயோத்தி வழக்கில் இருந்த அனைத்து நீதிபதிகளும் 4 மாதங்களாக வேலை... வேலை... வேலை என்றே இருந்தோம். எங்கள் நீதிபதிகள் எல்லோரும் கடுமையாக உழைத்தோம். அதனால் நாங்கள் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தோம்” எனத் தெரிவித்தார். 




உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவர் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கினை சிறப்பு அமர்வு ஒன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த சிறப்பு அமர்வில் ரஞ்சன் கோகாயும் ஒரு நீதிபதியாக இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அந்த பெண் ஊழியரின் தரப்பு வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு “என் சுயசரிதை புத்தகத்தில் ஒரு வரி உள்ளது. அதில், பின்னோக்கிப் பார்த்தால், நான் அந்த அமர்வில் நீதிபதியாக இருந்திருக்கக் கூடாது என்று இருக்கும். நான் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நாம் அனைவரும் தவறு செய்கிறோம். அதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை. இந்தியாவின் தலைமை நீதிபதிகள் சொர்க்கத்தில் இருந்து இறங்குவதில்லை. கடின உழைப்பால் கட்டப்பட்ட 40 ஆண்டுகால நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனர்” எனத் தெரிவித்தார். 


ரஞ்சன் கோகாய் ராஜ்யசபா சீட் குறித்து தனது சுயசரிதை புத்தகத்தில் எம்.பி.சீட்டை ஏற்றுக்கொள்ள நான் யோசிக்கவே இல்லை எனவும் ர்ஃபேல் மற்றும் அயோத்தி வழக்குகளில் தீர்ப்பளிக்க எம்.பி சீட்டே காரணம் என குற்றச்சாட்டுகள் கூறப்படும் என்றும் கற்பனை கூட செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
நீதித்துறை மற்றும் தனது சொந்த மாநிலமான அஸ்ஸாமின் பிரச்சனைகளை எடுத்துரைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே வருகை தந்துள்ளதாக ராஜ்யசபா பதிவுகள் தெரிவிக்கின்றன. 




இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஞ்சன் கோகாய் “தனிப்பட்ட முறையில் நான் அங்கு செல்வது மிகவும் வசதியாக இல்லை. அதுவும் கொரோனா காலத்தில் ராஜ்யசபாவுக்கு செல்வதை கம்ஃபர்டபுளாக உணரவில்லை. சமூக விலகல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டாலும், அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. நான் நினைக்கும் போது ராஜ்யசபாவுக்குச் செல்வதுதான் விஷயம். நான் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள் இருப்பதாக நினைக்கும் போது... நான் ஒரு நியமன உறுப்பினர். நான் எந்த கட்சியாலும் ஆட்சி செய்யவில்லை. எனவே, மணி அடிக்கும் போதெல்லாம், கட்சி உறுப்பினர்கள் வருவதுபோல் அது என்னைக் கட்டுப்படுத்தாது. நான் என் விருப்பப்படி அங்கு செல்கிறேன். என் விருப்பப்படி வெளியே வருகிறேன். நான் அங்கு ஒரு சுயேச்சை உறுப்பினர்,” எனத் தெரிவித்தார். 


ரஃபேல் மற்றும் அயோத்தி போன்ற வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் "வெகுமதி" என்ற குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு, “தீர்ப்புகள் என்னுடையது மட்டுமல்ல, ஒரு பெஞ்ச் மூலம் நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.