Chief Justics Of India: உச்சநீதிமன்றத்தின் புதிய மற்றும் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.ஆர்.கவாய்.. இன்றே கடைசி
இந்திய உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே மாதம் பி.ஆர். கவாய் பதவியேற்றார். குறுகிய காலத்திலேயே உச்சநீதிமன்ற பணியிடங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி கவனத்தை ஈர்த்தார். ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதிப்பது தொடர்பான மனு போன்ற முக்கிய வழக்கு விசாரணைகளில் பங்கேற்றார். மத்திய அரசுக்கும், அவருக்கும் இடையேயான கருத்து மோதலும், மதரீதியாக எழுந்த சர்ச்சைகளும் பேசுபொருளாகின. இந்நிலையில் நாளையுடன் அவரது பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் அவருக்கு கடைசி வேளை நாளாகும். இதனை முன்னிட்டு நேற்றே அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது பேசிய கவாய், “தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் நம்பும் உண்மையான மதச்சார்பற்ற நபர்” என்று தெரிவித்தார்.
பி.ஆர். கவாய் அறிவுரை
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கவாய், “டாக்டர் அம்பேத்கராலும் அரசியலமைப்பாலும்தான் தான் தற்போதைய நிலையை என்னால் அடைய முடிந்தது. அம்பேத்கர் இல்லையெனில், தரையில் அமர்ந்து நகராட்சி பள்ளியில் படிக்கும் எந்த ஒரு சிறுவனாலும் இதைப் பற்றி கனவு காண முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்திய அரசியலமைப்பின் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் நான்கு அடிப்படைக் கற்களின்படி வாழ முயற்சித்தேன். உச்ச நீதிமன்றம் ஒரு மிகச் சிறந்த நிறுவனம். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கம், பதிவாளர் சங்கம் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், நீதிமன்றம் செயல்பட முடியாது. வழக்கறிஞர் சங்கத்தின் பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் SCAORA எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
புதிய தலைமை நீதிபதி யார்?
பி.ஆர். கவாயை தொடர்ந்து நாட்டின் புதிய மற்றும் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி பதவியேற்கும் இவர் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை சுமார் 16 மாதங்கள் அந்த பதவியில் நீடிக்க உள்ளார். ஹரியானா மாநிலம் ஹைசர் மாவட்டத்தில் உள்ள பெத்வர் கிராமத்தில் 1962ம் ஆண்டு, பிப்ரவரி 9ம் தேதி சூர்யகாந்த் பிறந்தார். ரோதக்கில் உள்ள மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் 1984ம் ஆண்டு சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, அதே ஆண்டில் அந்த மாவட்ட நீதிமன்றத்திலேயே தனது வழக்கறிஞர் பயிற்சியை தொடங்கினார்.
சூர்யகாந்தின் பணி அனுபவம்
1985 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாறி, அங்கு அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றார். ஜூலை 7, 2000 அன்று, ஹரியானாவின் ஜுனியர் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் மற்றும் மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். ஜனவரி 9, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வரை அவர் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார்.
நீதிபதியாக, அவர் 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகக் குழுவில் பணியாற்றினார். பின்னர் 2011 இல் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் முதலிடம் பெற்றார். அக்டோபர் 5, 2018 அன்று மாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அதன் பிறகு மே 24, 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். மே 14, 2025 முதல், அவர் NALSA இன் நிர்வாகத் தலைவராகவும், இந்திய சட்ட நிறுவனத்தின் பல குழுக்களிலும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.