புதிய நீதிபதி பதவிப்பிரமாணம்:

Continues below advertisement


மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபாங்கர் தத்தாவை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் தீபாங்கர் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட், தீபாங்கர் தத்தாவிற்கு இன்று (டிச.12) உச்சநீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.






உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை:


புதிய நீதிபதி பதவியேற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உடன் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், தலைமை நீதிபதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 34 பேர் வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த தீபாங்கர் தத்தா?:


உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபத்தியாக பொறுப்பேற்றுள்ள தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயதாகிறது. நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது வரை என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற உள்ளார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அவர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2006ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தீபாங்கர் தத்தாவின் தந்தை சலில் குமார் தத்தாவும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அவரது நெருங்கிய உறவினரான அமிதவ ராய்,  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கொலிஜியம் பரிந்துரையை ஏற்க மறுக்கும் மத்திய அரசு:


அண்மையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதற்கு எதிராக, பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடரப்பட்டது. அதுதொடர்பான, விசாரணையின்போது மூத்த வழக்கறிஞரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருமான விகாஸ் சிங், நீதிபதி தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு 5 வாரங்கள் ஆகியும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது என சுட்டிக்காட்டினார். இதுபோன்ற தாமதத்தை புரிந்துகொள்ளவோ, ஆமோதிக்கவோ முடியவில்லை என நீதிபதி எஸ்.கே.கவுல் குறிப்பிட்டு இருந்தார். அதைதொடர்ந்து, கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தீபாங்கர் தத்தா பதிவியேற்றுள்ளார்.