பதவியேற்பு:
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் பதவி பிரமாணம் இன்று காந்தி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
குஜராத்தில் பா.ஜ.க. ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரில் விஜய் ரூபானிக்கு பதிலாக முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்றார். இந்நிலையில் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக புபேந்திர படேலையே பா.ஜ.க அறிவித்தது. இன்று முதல்வர் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
அமைச்சரவையும் பதவியேற்பு:
முதல்வருடன் சுமார் 25 கேபினட் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜக குஜராத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது - மாநிலத்தின் 182 இடங்களில் 156 இடங்களையும் 53 சதவீத வாக்குப் பங்கையும் வென்றது.
இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹரியானாவின் மனோகர் லால் கட்டார், மத்தியப் பிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை, உத்தரகாண்டின் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மற்றும் குஜராத்தில் பிரசாரம் செய்த எம்.பி.க்களும் கலந்துக் கொண்டனர். முதல்வர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பூபேந்திர படேல் இளமை காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் இல் பயிற்சி பெற்று வளர்ந்த இன்னொரு குஜராத் முதல்வர் ஆவார். 1990 களில் தனது பொறியியல் டிப்ளமோவை முடித்து, அரசியலில் சேர்ந்தார். 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பிலிருந்தே கள அரசியலில் நீண்ட காலம் தீவிரமாக இருந்தார்.
பூபேந்திர படேல் குஜராத்தின் பிரச்சனைகளை அமைதியாக தீர்ப்பவர் என்று அறியப்படுகிறார், அவர் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய மக்களுடன் தனித்துவமான வழியைக் கொண்டவர். "ஒரே வருடத்தில், அவர் பல பிரச்சனைகளை... எந்த விளம்பரமும் இல்லாமல் தீர்த்துவிட்டார்" என்று பாஜக நிர்வாகி முகேஷ் தீட்சித் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார். 60 வயதான அவர் அவருடைய முடிவெடுக்கும் திறனுக்காக மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
யார் இந்த பூபேந்திர படேல்:
ஆனந்திபென் படேல், கேசுபாய் படேல், பாபுபாய் படேல் மற்றும் சிமன்பாய் படேல் என நிறைய படேல் சமூகத்தினரை முதல்வர்களாக கொண்ட மாநிலம் குஜராத். அம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களுள் பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்ற முதல் கத்வா படேல் ஆவார். பூபேந்திர படேல் அரசியலில் அறிமுகமானதில் இருந்து அவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதால் அவரை நேர்மையானவர் என்கிறார்கள். மேலும் கை சுத்தம் என்று பாராட்டப்படுகிறார்.
கட்டுமான தொழில் செய்து வரும் இவர், 2017ல் எம்.எல்.ஏ.,வாகும் வரை, தன் சொந்த அலுவலகத்தில் தான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில், பாரம்பரியமாக காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் பட்டியலின பிரிவு மற்றும் பழங்குடியினர் மத்தியில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி - இந்த முறை மாநிலத்தில் தனது வாக்கு வங்கியை திறந்து தேர்தலில் பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் பாரம்பரிய ஆதரவாளர்களான patidars பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறியதால், அக்கட்சி களமிறங்காமல் இருக்க முடிவு செய்தது. ஹர்திக் படேல் இந்த முறை விராம்கம் தொகுதியில் காங்கிரஸின் லகாபாய் பர்வாத்தை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி, வெளிப்படையான பிரச்சாரத்தை மேற்கொண்டதால், ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மாநிலத்தில் அதன் முக்கிய தலைவர்கள், மாநில தலைவர் கோபால் இத்தாலியா, படிதார் (patidars) தலைவர் அல்பேஷ் கதிரியா மற்றும் முதல்வர் முகமான இசுதன் காத்வி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.