உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் நீதிபதி குரேஷி பெயர் இடம்பெறாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ஒரே நேரத்தில் 9 பேரை உச்ச நீதிமன்றத்துக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது இதுவே முதன்முறை.
கொலீஜியம் என்றால் என்ன?
உச்ச நீதிமன்றத்துக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய கொலீஜியம் என்ற குழு இருக்கிறது. இதனை தமிழில் நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) என்று கூறுகிறோம். இது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே.
இந்த கொலீஜியம் தேர்வு செய்த சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகிய 9 பேரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அகில் குரேஷி பெயர் ஏன் இடம் பெறவில்லை?
இந்தப் பட்டியலில் மூத்த நீதிபதியான அகில் குரேஷியின் பெயர் இடம்பெறவில்லை. அகில் குரேஷி, 2018ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பதவியேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அந்த மாற்றத்துக்கு குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
2019ல், நீதிபதி குரேஷியை மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அவரது பெயரை மட்டும் லாவகமாக விட்டுவிட்டதாக புகார் எழுந்தது.
இதனால், குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை ஏற்று அகில் குரேஷிக்கு பதவி உயர்வு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரப்பட்டது. குஜராத் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிபதிகள் ஃபாலி எஸ் நாரிமன், அர்விந்த தத்தார், துஷ்யந்த் தவே, யதின் ஓஸா, மிஹிஅர் தக்கோர், பெர்ஸி கவினா ஆகியோர் வாதாடினர். 4 மாதங்களுக்குப் பின்னர் உச்ச நீதிமன்ற கொலீஜியம், அகில் குரேஷியை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்குப் பதிலாக திரிபுரா உயர் நீதிமன்றத்துக்கு நியமித்தது.
இத்தகைய முடிவுகளுக்குப் பின்னணி என்னவென்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், அவர் வழங்கிய சில தீர்ப்புகளே அவருக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 2010ல் நீதிபதி குரேஷி அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். மேலும், 2012 ஆம் ஆண்டு லோக்ஆயுக்தா தலைவராக நீதிபதி ஆர்.ஏ.மேத்தா தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்று குரேஷி அளித்த தீர்ப்பு குஜராத் மாநில அரசுக்கு பின்னடைவானது. இதன் காரணமாகவே அவரது பெயர் இந்த முறை 9 நீதிபதிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.