தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பது, நீதிபதிகளின் வேலை கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
மனுதாரர் கோரிக்கை:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம் தலைவரான அபிஷேக் பானர்ஜிக்கு எதிரான வழக்கை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், மனுதாரருக்கு எதிராக தொலைக்காட்சியில் பேசியதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
”நீதிபதிகள் வேலை கிடையாது”
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பது நீதிபதிகளின் வேலை கிடையாது. மனுதாரர் குறிப்பட்டதை போன்று நீதிபதி நேர்காணலில் பேசி இருந்தால் இந்த வழக்கு விசாரணையில் இனி அவரால் நிச்சயமாக பங்கேற்க முடியாது” என தலைமை நீதிபதி பேசினார்.
நேர்காணல் கொடுத்தாரா?
அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அபிஷேக் பானர்ஜி மீது சுமத்தப்பட்டு இருப்பது மிகப்பெரிய ஊழல் என குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி “ஊழல் தொடர்பாக நாங்கள் எதுவும் கேட்கவில்லை. நீதிபதி நேர்காணல் கொடுத்தாரா, அரசியல் தலைவர் தொடர்பாக மனுதாரர் குறிப்பிட்டதை போன்று பேசினாரா, விசாரணைக்காக வேறு நீதிபதியை நியமிக்க வேண்டுமா? என்பது பற்றியே வினவுவதாக” கூறினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
வழக்குகள் நிலுவை:
முன்னதாக இன்றைய நீதிமன்ற நடவடிக்கை தொடங்கியபோது, தங்கள் வழக்குகளை முன்கூட்டியே அல்லது அவசரமாக பட்டியலிட வேண்டும் என சில வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ”சில நீதிபதிகள் கிடைக்காததால் இன்றைய தேதிகள் வழங்கப்பட்ட வழக்குகள் தடுக்கப்படாது. அதேநேரம், ஐந்து நீதிபதிகள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். அடுத்த தேதி அல்லது அதற்கடுத்த இதர தேதியில் குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்க அவர்களை பட்டியலிடுவோம்” என கூறினார்.
தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க கேசவானந்த பாரதி தீர்ப்பின் 50வது ஆண்டு நிறைவையொட்டி, உச்ச நீதிமன்றம் 13 நீதிபதிகள் கொண்ட பெஞ்சின் 13 கருத்துகள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது என்றும் தலைமை நீதிபதி அறிவித்தார்.
தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கு:
இதனிடையே, தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றுள்ள, சில நீதிபதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டது.