உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம், 12 நாள்களில் 5.4 செ.மீ அளவுக்கு மண்ணில் புதைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேற்று அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஆனால், அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே, இஸ்ரோவின் இணையதளத்தில் இருந்து அந்த அறிக்கை நீக்கப்பட்டது. 


இஸ்ரேவின் தேசிய தொலையுணர்வு மையம் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தில், டிசம்பர் 27 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ மண்ணில் புதைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஜோஷிமத் தகவல்


இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜோஷிமத் குறித்த தகவல்கள் ஊடகத்திடம் பேசவும் சமூக வலைதளத்தில் தகவல்களை பகிரவும் அரசு நிறுவனங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தடை விதித்துள்ளது.


அரசு நிறுவனங்களின் இம்மாதிரியான சொந்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக NDMA விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து NDMA எழுதியுள்ள கடிதத்தில், "பல்வேறு அரச நிறுவனங்கள் சமூக ஊடகத் தளத்தில் இந்த விவகாரம் தொடர்பான தரவுகளை வெளியிடுவதுடன், அவை ஊடகங்களுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்குவதையும் கவனித்து வருகிறோம். 


நிபுணர்கள் குழு:


இது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, நாட்டின் குடிமக்கள் மத்தியிலும் குழப்பத்தை உருவாக்குகிறது. ஜனவரி 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.


மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத்தின் நிலை குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இஸ்ரோ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், இந்த பிரச்னை தொடர்பாக தங்களுடைய நிறுவனங்களுக்கு விளக்க வேண்டும்.


நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை சமூக ஊடக தளங்களில் எதையும் வெளியிடுவதைத் தவிர்க்கவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


புதையும் நகரம்


முன்னதாக, இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்தாண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு தற்போது நிலத்தில் மண் புதைந்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மத்திய ஜோஷிமத் நகரில் ராணுவ ஹெலிபேட் மற்றும் கோயில் அமைந்துள்ள பகுதியில் திடீரென மண் பெயர்ந்தது.


2,180 மீட்டர் உயரத்தில் உள்ள ஜோஷிமத்-அவுலி சாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. முந்தைய மாதங்களை காட்டிலும் புதைவின் விகிதம் தற்போது குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஜோஷிமத் நகரம் 9 செ.மீ அளவுக்கு புதைந்துள்ளது.


ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 7 மாத காலத்தில், ஜோஷிமத் நகரின் பகுதிகள் 9 செ.மீ வரை நிலச்சரிவை பதிவு செய்துள்ளது. கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோளில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.