உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம், 12 நாள்களில் 5.4 செ.மீ அளவுக்கு மண்ணில் புதைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 


இஸ்ரேவின் தேசிய தொலையுணர்வு மையம் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தில், டிசம்பர் 27 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ மண்ணில் புதைந்தது தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், களத்தில் இருந்த சாட்சிகளின் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது. "கடந்தாண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு தற்போது நிலத்தில் மண் புதைந்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.


மத்திய ஜோஷிமத் நகரில் ராணுவ ஹெலிபேட் மற்றும் கோயில் அமைந்துள்ள பகுதியில் திடீரென மண் பெயர்ந்தது.


2,180 மீட்டர் உயரத்தில் உள்ள ஜோஷிமத்-அவுலி சாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. முந்தைய மாதங்களை காட்டிலும் புதைவின் விகிதம் தற்போது குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஜோஷிமத் நகரம் 9 செ.மீ அளவுக்கு புதைந்துள்ளது.


ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 7 மாத காலத்தில், ஜோஷிமத் நகரின் பகுதிகள் 9 செ.மீ வரை நிலச்சரிவை பதிவு செய்துள்ளது. கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோளில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நகரம் தானாகவே மண்ணில் புதைவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. மனிதர்களால் நிகழ்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள், இயற்கை போன்றவையே காரணம் என வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான் தெரிவித்துள்ளார்.


"ஜோஷிமத் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன. நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவின் இடிபாடுகளின் மீது உருவாக்கப்பட்டது ஒரு காரணம்.


பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். காலநிலை மாற்றம், காலபோக்கில் நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் கற்களின் பலம் குறைந்தது மூன்றாவது காரணம்" என அவர் கூறியுள்ளார்.


ஜோஷிமத் பத்ரிநாத்தின் நுழைவாயிலாக இருப்பதால், ஹேம்குந்த் சாஹிப், பனிச்சறுக்கு தலமான அவுலியிலில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகளால் ஏற்படும் அழுத்தம் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.







எல்லா இடங்களிலும் விடுதிகளும், உணவகங்களும் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையால் ஏற்பட்ட அழுத்தம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததும் நிலம் மண்ணில் புதைவதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது.