கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் தூண் சரிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


செவ்வாய்கிழமை அன்று மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின்போது மெட்ரோ ஊழியர்களின் அலட்சியத்தின் காரணமாக இளம் பெண் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது தூண் விழுந்தது.


அந்த பெண்ணும் அவரது குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரயில் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தூண் விழுந்ததற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சரிந்து விழுந்த தூண்  உலோக கம்பிகளால் ஆனது. சுமார் 40 அடி உயரம் இருந்தது.


ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) அறிவித்துள்ளது.


இந்த விபத்து மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.


பெங்களூருவில் சில்க்போர்டு-தேவன ஹன்ளி மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கான்கிரீட் தூண் கட்டுவதற்காக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தன. 


நேற்று முன்தினம் காலை தூண் கட்டுவதற்காக பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. 


 






இதற்கிடையே, நேற்று, மத்திய பெங்களூருவில் சாலையின் ஒரு பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. வர்த்தக பகுதியான மத்திய பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இந்நிலையில், பிரைகெட் சாலையில் ஒருவர் பைக்கை ஓட்டி வந்தபோது, அங்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது.