உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் இருந்து செல்லும் சொகுசுக் கப்பல் இந்தியாவில் ஐந்து மாநிலங்கள், வங்கதேசத்தில் 27 நதிகள் வழியாக 3,200 கிமீ தூரம் பயணிக்கும்.
இந்நிலையில், கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரைதட்டியதாக தகவல் வெளியாகியது. ஆனால், அதற்கு தற்போது அதிகாரப்பூர்வமான மறுப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் (IWAI) தலைவர் சஞ்சய் பந்தோபாத்யாய், "சொகுசு கப்பல் பயண அட்டவணையின்படி பாட்னாவை சென்றடைந்தது. சாப்ராவில் தரைதட்டவில்லை. கங்கா விலாஸ் கப்பல் திட்டமிட்டபடி அதன் பயணத்தைத் தொடரும்"
கப்பல் தரைதட்டியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள சாப்ரா சர்கில் ஆபிசர் சதேந்திர சிங், "உள்ளூர் பத்திரிகையாளர்கள் என்னை தவறாக மேற்கோள் காட்டியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் அந்த இடத்தில் இருந்தன. எந்த வித தடையும் இல்லை. வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SDRF படகுகள் மாவட்ட அதிகாரிகளால் அனுப்பப்பட்டன" என்றார்.
கங்கா விலாஸ் கப்பலில் மூன்று தளங்கள் மற்றும் 18 அறைகள் உள்ளன. இதில், 36 சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வகையில் உள்ளது.
இந்த கப்பலில் உடற்பயிற்சி கூடம், ஸ்பா மையம், நூலகம் போன்றவை உள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து 31 பயணிகளைக் கொண்ட குழு, கப்பலின் 40 பணியாளர்களுடன் பயணத்தைத் தொடங்கவுள்ளது.
சொகுசு கப்பல் தலைவர் ராஜ் சிங் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய போது, "இந்த கப்பல் 27 நதிகள் வழியாக செல்லும். இது வங்காளதேசத்துடனான தொடர்பை மேம்படுத்தும்" எனக் கூறினார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் சர்வானந்தா சோனோவால் தெரிவித்தார். public–private partnership மாதிரியின் கீழ் கங்கா விலாஸ் திட்டம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற "கங்கா ஆரத்தி"யில் இருந்து, இது பௌத்த மதத்திற்கு மிகவும் மரியாதைக்குரிய இடமான சார்நாத்தில் நிறுத்தப்படும். இந்த சொகுசுக் கப்பல் தாந்த்ரீக கைவினைகளுக்கு பெயர் பெற்ற மயோங் மற்றும் அஸ்ஸாமில் உள்ள மிகப்பெரிய நதி தீவு மற்றும் வைஷ்ணவ கலாச்சாரத்தின் மையமான மஜூலி ஆகிய இடங்களில் நின்று பயணிக்கும்.