புதுச்சேரி ஜிப்மரில் எதிர்காலத்தில் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை. இங்கு மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இது மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த JIPMER என்பதன் முழு பெயர் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பதாகும். புதுவை என்பதாலும் இங்கு பிரென்ச் மக்கள் இன்னமும் வசித்துக் கொண்டிருப்பதாலும் முக்கியமாக இது ஒரு சுற்றுலா தலம் என்பதால் இந்த மருத்துவமனையில் இந்தியும், ஆங்கிலமும் ஆட்சிமொழியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் அலுவல் மொழியாக இந்தியை மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றிறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடுகள் மற்றும் கோப்புகளில் இதுவரை இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி வரும் காலத்தில் அவற்றில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தி திணிப்பிற்கு எதிராக தென் இந்தியாவில் போராட்டம் நடைபெறும் நிலையில் இந்த உத்தரவு பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஜிப்மர் மருத்துவமனையில் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்து வருகிறது. பொது மக்களுக்கும் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் அறிக்கை தமிழில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகம் சார்பில் இயக்குனர் பெயர் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அலுவலகப் பணிக்கு பயன்படுத்தப்படும் மொழி குறித்தது இந்த அறிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அலுவலக மொழி 1976ம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


நாடாளுமன்றக் குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்கள், பிரிவு ஊழியர்களுக்கான பொறுப்பு நபர்கள் ஆகியோர் இதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், ஏதேனும் உதவி தேவையெனில் இந்தி பிரிவை தொடர்புகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்த நிலையில் ஜிப்மர் உத்தரவுக்கு மக்களவை எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ஜிப்மர் உத்தரவை குறிப்பிட்டு அதில் உள்ள Hindi Only என்பதை சிவப்பு பேனாவால் கோடிட்டு கூறுகையில், மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? மத்திய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திதான் ஆங்கிலத்திற்கு மாற்று மொழி என்றும் அதுதான் இணைப்பு மொழி என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியிருந்தனர். இந்தி மொழி தொடர்பாக அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப்புக்கும் இடையே சண்டையும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.