கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உனா பகுதியில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்கள் மீது நிகழ்ந்த சாதிய வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து தலித் அஸ்மிதா யாத்ரா நடத்தி, நாட்டையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜிக்னேஷ் மேவானி. பிரதமர் நரேந்திர மோடி பற்றிய அவரது ட்வீட் ஒன்றிற்காக அவரைக் கடந்த ஏப்ரல் 21 அன்று அசாம் காவல்துறை கைது செய்ததோடு, பெண் காவலர் ஒருவரைத் தாக்கியதாக மற்றொரு குற்ற வழக்கையும் பதிவு செய்தது.
சுமார் 10 நாள்கள் சிறை வாசத்தில், டென்னிஸ் விளையாட்டு வீரர் அண்ட்ரே அகாசியின் சுயசரிதத்தைப் படித்து முடித்துள்ள ஜிக்னேஷ் மேவானி அடுத்து குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஒரு நேர்காணலில் ஜிக்னேஷ் மேவானி பேசியதில் இருந்து இங்கே கொடுத்துள்ளோம்..
தன்னுடைய சிறை அனுபவங்கள் தன்னை எவ்வாறு மாற்றியுள்ளன என்பது குறித்து பேசியுள்ள ஜிக்னேஷ் மேவானி, `எனக்காக மக்கள் வீதியில் இறங்கி, இந்த வெயிலில் போராடியது என்னை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அகமதாபாத்தில் 45 டிகிரி வெயில், குஜராத்தின் பிற பகுதிகளிலும் அப்படியே இருக்கிறது.. இந்தியா முழுவதும் இதே போன்ற ஆதரவு சமூக வலைத்தளங்களில் வழியாக இருந்தது. பாஜக செய்திருந்ததை எதிர்த்து கடுமையான கோபம் வெடித்திருக்கிறது. என் வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் இல்லை. ஆனால், இது இந்தியாவுக்கு ஆபத்தான காலகட்டம் என்பதை உணர்த்தும் விவகாரம். நாடு முழுவதும் பரிச்சயம் உள்ள எம்.எல்.ஏ ஒருவருக்கு இத்தனை சித்திரவதையும் அவமானமும் நிகழ்கிறது என்றால் சாதாரண மக்களுக்கு என்னவாகும்? இது ஜனநாயகத்திற்கு ஆபத்து’ எனக் கூறியுள்ளார்.
தான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனக்கு உதவி செய்ததைக் குறித்து பேசிய ஜிக்னேஷ் மேவானி, `நான் காங்கிரஸ் கட்சியில் சேர்வதால் இதனைக் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி எனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. நான் கைது செய்யப்பட்ட போது, எனது குழுவினருள் ஒருவர் நள்ளிரவில் ராகுல் காந்தியிடம் உதவி கேட்டு போன் செய்தார். ராகுல் காந்தி எழுந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உதவி வழங்கியதோடு, குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜக்தீஷ் தாக்கூர் குஜராத் மாநிலத்தில் ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் வந்து உதவியதோடு, அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா வழ்க்கறிஞர்களோடு எனக்காக வந்து உதவி செய்தார். நான் சிறையில் இருந்த பத்து நாள்களும் காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதன்மூலமாக, ஜிக்னேஷ் மட்டுமல்லாமல் சட்டவிரோதமாக யார் கைது செய்யப்பட்டாலும், யாரை பாஜக குறி வைத்தாலும், காங்கிரஸ் கட்சி உடன் நிற்கும் என்ற செய்தி மக்களுக்குப் புரிந்திருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
தன்னுடைய ட்விட் பற்றி பேசிய ஜிக்னேஷ் மேவானி, `நான் அதுபோன்றே என்னுடைய எல்லா ட்வீட்களையும் பதிவிட்டு வருகிறேன். அதனால் எந்த ட்வீட் மீது வழக்குப் பதிவு செய்வார்கள் எனத் தெரியாது. சிறைக்கு அஞ்சுவது என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை. இவர்கள் அப்பட்டமான பாசிஸ்ட்கள். அவர்களுள் சிலர் என்னைக் கொலை செய்ய விரும்புகிறார்கள் என்பதும் தெரிகிறது. இதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் கௌரி லங்கேஷ், தபோல்கர், பன்சாரே, கல்புரிகி ஆகியோரைக் கொலை செய்ய முடிகிறது. பொதுச் சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ் பலமான அடித்தளத்தை அமைத்தாலும், அதனை எதிர்த்து என் பணி அமைந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும், கடந்த 2018ஆம் ஆண்டு 2.5 லட்சம் தலித் மக்கள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள மாட்டோம் எனவும், பாஜகவுக்கு வாக்கு செலுத்த மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுத்துள்ளனர்., இதனால் என்மேல் கடும் கோபம் கொண்டிருக்கின்றனர். எனக்கு வேறு வழியே இல்லை. இவர்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.