ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்ததற்காக மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா அருகில் உள்ள கிராம பள்ளி ஒன்றில், குறைவான மதிப்பெண்கள் கொடுத்ததற்காக மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். வேண்டுமென்றே ஆசிரியர்கள் தங்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்குவதால் இந்த செயலை செய்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த வீடியோவை மாணவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 59 வினாடி வைரலான வீடியோவில் பேசிய மாணவர், “இந்த வீடியோவை நான் சமூக வலைத்தளங்களில் வைரலாக்க விரும்புகிறேன். இந்த நபர்கள் மட்டுமே மாணவர்களின் மதிப்பெண்களை குறைத்து குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இருப்பினும், அந்த மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உண்மையான தகுதி பெற்றவர்களா அல்லது ஆசிரியர்கள் வேண்டுமென்றே குறைந்த மதிப்பெண்கள் கொடுத்தார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், ஆசிரியர்கள் சரியான மதிப்பெண் வழங்காததால் பத்து மாணவர்கள் தோல்வியடைந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய தும்காவின் கோபிகந்தர் கிராம கல்வி விரிவாக்க அலுவலர் சுரேந்திர ஹெப்ராம், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும், அதற்கு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொகுதி கல்வி அதிகாரி கூறுகையில், "சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அனைத்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். நாங்கள் அங்கு சென்றபோது, நடந்து முடிந்த தேர்வில் தங்களுக்கு மிகவும் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், ஆசிரியர்களிடமிருந்து போதிய பதில் கிடைக்கவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்” என்று தெரிவித்தார்.