டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி காட்டிற்கு எடுத்து சென்று வீசியிருந்தார்.


50 துண்டுகள்:


இதை தொடர்ந்து, இதே போன்ற கொலை சம்பவம் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சி அரங்கேறி உள்ளது. ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது போலவே தனது மனைவியை ஒரு நபர் பல துண்டுகளாக வெட்டியுள்ளார்.


போரியோ காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  சாஹேப்கஞ்ச் பகுதியில் பழங்குடியைச் சேர்ந்த மனைவியை அவரது கணவரே 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை, 18 துண்டுகளை காவல்துறை மீட்டுள்ளனர்.


மனைவியை கொன்ற கணவர்:


சமீபத்தில்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். மனைவியை கொலை செய்த பிறகு, குற்றத்தை மறைக்கும் நோக்கில் அவர் காவல்நிலையத்தில் தனது மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீடொன்றில் இருந்து சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர், அந்த பெண்ணை பொய்யான தகவல்களை கூறி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ரூபிகா பஹாடின். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தில்தார் அன்சாரி, இவரை கொடூரமாக கொலை செய்யததாகக் கூறப்படுகிறது. ரூபிகா குடும்பத்தினர் ரூபிகாவை காணவில்லை என்று புகார் அளிக்க சென்றபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணையின் போது, ​​ரூபிகாவின் சிதைந்த உடலை போலீசார் மீட்டனர்"


12 பாகங்கள் கண்டுபிடிப்பு:


போரியோ சந்தாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் இருந்து மனித கால் மற்றும் பிற உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். கிடைத்த தகவலின் பேரில், எஸ்பி அனுரஞ்சன் கிஸ்போட்டா மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு குற்றம் நடந்த இடத்திற்குச் சென்றனர்.


மேலும், மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து சாஹேப்கஞ்ச் எஸ்.பி. கூறுகையுில், "கொல்லப்பட்ட 22 வயது பெண்ணின் உடலின் 12 பாகங்கள் சாஹிப்கஞ்சில் கண்டெடுக்கப்பட்டன. உடலின் சில பாகங்கள் காணவில்லை. அதை தேடும் பணி நடந்து வருகிறது. அவரது கணவர் தில்தார் அன்சாரியை போலீசார் கைது செய்தனர். இறந்தவர் அவரது இரண்டாவது மனைவி" என்றார்.