CM Hemant Soren: ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்? - எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனையில் ஜார்க்கண்ட் முதலமைச்சர்

CM Hemant Soren: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வது குறித்து ஆளுநர் இன்று முடிவெடுப்பார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Continues below advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (Hemant soren) ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் இல்லத்திற்கு படையெடுத்துள்ளனர்.

Continues below advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சரை பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை:

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னுடைய பெயரில் நிலக்கரி சுரங்கம் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக கடந்த 2019ஆம் ஆண்டு ஹேமந்த் சோரன் பதவியேற்றார். இவருடைய ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் இவர் மீது பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமாக ரகுபர் தாஸ் புகார் அளித்தார். அதில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னுடைய பெயரில் சுரங்கம் அமைக்க உரிமம் ஒன்று கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை எதிர்கட்சிகள் ஆளுநரிடம் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் தன்னுடைய பரிந்துரையை ஆளுநருக்கு சீல் வைக்கப்பட்ட கவரில் அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரை இன்னும் வெளியே தெரிவிக்கப்பட்டவில்லை. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஆளுநர் நிச்சயம் ஏற்க வேண்டும் என்பதால் அவர் தகுதி நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை ஆளுநர் அலுவலகத்திலிருந்து எனக்கு எந்தவித தகவலும் வரவில்லை. ஆளுநருக்கு சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட பரிந்துரை அளிக்கப்படும். ஆனால் இந்த தேர்தல் ஆணைய பரிந்துரை பாஜகவினர் மற்றும் பாஜகவின் எம்பி உள்ளிட்டவர்கள் சேர்ந்து எழுதியது போல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான புகாரை பாஜக ஆளுநரிடம் அளித்தது. அவர் அந்தப் புகாரை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையம் சார்பில் முதலில் தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 


சுரங்க உரிமம் தவிர முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது மற்றொரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தன்னுடைய மனைவி கல்பனா சோரன் பெயரில் ஐடி பூங்கா ஒன்றிலிருந்து 11 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தொழில்துறையும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கட்டுப்பாட்டிற்குள் வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முக்கிய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வாரம் அவர் டெல்லி செல்ல உள்ள நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 9ஏ-ன்படி மக்கள் பிரதிநிதி ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது தன்னுடைய உறவினர்கள் பெயரிலே அரசு உடன் ஏதாவது ஒப்பந்தம் அல்லது தொழில்முறை ஒப்பந்தத்தில் ஈடுபட்டால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற விதி உள்ளது. இந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவது குறித்து ஆளுநர் அலுவகம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. 

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் பொதுசெயலாளர் மற்றும் செய்திதொடர்பாளர் சுப்ரியோ பட்டாசார்யா கூறுகையில், எங்களிடம் 50 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் இருக்கிறார்கள். ஆளநர் எங்கள் கட்சியின் பெரும்பான்மையை நிரூப்பிக்க சொன்னால், அதை நிச்சயம் செய்ய தயாரகா உள்ளோம் என்று கூறியுள்ளார்.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola