ஜேஇஇ மெயின் தேர்வின் ஜனவரி மாத அமர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு குறித்த அறிவிப்பு டிசம்பர் 15ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் தேர்வானது, ஜனவரி 24, 25, 27, 28, 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்த நிலையில் இதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு , டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன.
முதல் அமர்வு (session 1) ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் 2ஆவது அமர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன.
இந்த நிலையில், ஜனவரி மாத ஜேஇஇ மெயின் தேர்வுக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொதுத் தேர்வுக்குத் தயாராகும் சூழலில் முதல் அமர்வுக்குப் படிக்க முடியாது என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து postponeJEEMains உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு
ஜேஇஇ மெயின் தேர்வுக்குத் தயாராகி வரும் ரிது என்ற மாணவர் கூறும்போது, "பொறியியல் படிப்புகளைப் படித்து, பொறியாளர் ஆவது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வு. எனினும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்வு தேதி காரணமாக, அவர்களின் கனவைக் கைவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பயனாளியான சர்ஃபராஸ் என்பவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜேஇஇ மெயின் தேர்வில் கலந்துகொள்ள நியாயமான வாய்ப்பு கொடுக்காதது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். அதனால் ஜேஇஇ தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அனைவருக்கும் அளிக்க வேண்டும் "என்று கூறியுள்ளார்.
அழுத்தம் காரணமாக 3 மாணவர்கள் மரணம்
அகில இந்திய பெற்றோர் சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான அனுபா சஹாய் கூறும்போது, "மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர். இந்த விவகாரம் சிக்கலான ஒன்று. சில நாட்களுக்கு முன்பு, பயிற்சி மையங்களின் தலை நகரமான கோட்டாவில் அழுத்தம் காரணமாக 3 மாணவர்கள் இறந்துள்ளனர்.
2023 க்யூட் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையே ஏன் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் மேற்கொள்ளக் கூடாது? அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் சமத்துவத்தைப் பேண வேண்டும்" என்று அனுபா தெரிவித்துள்ளார்.