மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம், கடந்த மூன்று நாள்களாக நடந்து வருகிறது. ஆளுங்கட்சியை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர்களும் பதிலடி தந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்:
இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடி பேசினார். "மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதில், அரசியல் செய்ய வேண்டாம்" என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா சேலை கிழிப்பு சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்போது, முதலமைச்சராகாத ஜெயலலிதாவின் புடவை தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் பிடித்து இழுக்கப்பட்டது. அவர், அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அங்கு அமர்ந்திருந்த திமுகவினர் அவரை பேச விடாமல் கூச்சல் எழுப்பினர். அவரை பார்த்து சிரித்தனர்.
"ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து இழிவு படுத்தினார்கள்"
ஜெயலலிதாவை மறந்துவிட்டதா திமுக? நீங்கள் அவருடைய சேலையை பிடித்து இழுத்து, அவரை இழிவு படுத்தினார்கள். அன்றைய தினம், தான் முதலமைச்சராகும் வரை சட்டப்பேரவைக்கு வரமாட்டேன் என ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சொன்னபடியே, தமிழ்நாடு முதலமைச்சராக சட்டப்பேரவைக்கு திரும்பினார்" என்றார்.
இதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, தனது உரையை தொடர்ந்த நிர்மலா சீதாராமன், "கௌரவர்களின் சபை பற்றி நீங்கள் பேசுகிறீர்களே. திரௌபதியை பற்றி பேசுகிறீர்கள். ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.
செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்த நிர்மலா சீதாராமன்:
முன்னதாக பேசிய திமுக எம்பி கனிமொழி, "இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக" குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், "சிலப்பதிகாரத்தில் என்ன சொல்லப்பட்டதோ அதையே பிரதமர் செயல்படுத்தி வருகிறார். மறந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட நீதியின் சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அவமதிக்கும் செயல் அல்லவா?" என சாடினார்.