21ஆம் நூற்றாண்டு தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் ஓப்பன்ஹைமர். அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.


ஓப்பன்ஹைமர் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்:


இந்த படம் வெளியானதில் இருந்து, விஞ்ஞான உலகையே திருப்பிப்போட்ட ஓப்பன்ஹைமர் குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது, வெளியாகியுள்ள தகவலின்படி, இந்தியாவுக்கு வந்து குடியேறும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியான புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


இந்திய அணுசக்தி துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபா பற்றி பக்தியார் கே. தாதாபோய் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம்தான் வெளியாகியுள்ளது. இதில், ஹோமி பாபாவுக்கும் ஓப்பன்ஹைமருக்கும் இடையே உள்ள நட்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.


நட்பு பாராட்டிய பாபாவும் ஓப்பன்ஹைமரும்:


"போர் முடிந்த பிறகு பாபா, ஓப்பன்ஹைமரை சந்தித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். பாபா போன்று ஓபன்ஹைமரும் மிகவும் பண்பட்ட மனிதராக இருந்ததால் இது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஓப்பன்ஹைமர், சமஸ்கிருதத்தை படித்தவர். லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளையும் அறிந்திருந்தார்" என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அவர் உருவாக்கிய அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, ஓபன்ஹைமர், மன உளைச்சலுக்கு உள்ளானார். அணுகுண்டை உருவாக்கும்போது, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்ததால் சக விஞ்ஞானிகள் தயக்கத்தில் இருந்துள்ளனர்.


அந்த சமயத்தில், தங்களின் வேலைகளை மட்டுமே தாங்கள் செய்வதாகவும் ஆயுதம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய முடிவுகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என சக விஞ்ஞானிகளை அவர் சமாதானப்படுத்தி உள்ளார். ஆனால், குண்டு வீசப்பட்ட பிறகு, அணு ஆயுதத்தை மேலும் மேம்படுத்துவதற்கு எதிராக ஓப்பன்ஹைமர் கருத்து தெரிவித்து வந்தார்.


இந்திய குடியுரிமை வழங்க முன்வந்தாரா நேரு?


குறிப்பாக, ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்குவதற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். அணு ஆயுதம் குறித்த நிலைபாட்டை மாற்றி கொண்டதால், கடந்த 1954ஆம் ஆண்டு, அவரை விசாரணைக்கு உட்படுத்தியது அமெரிக்க அரசு. இதை தொடர்ந்து, அணு ஆயுதம் தொடர்பான ஆய்வின் கொள்கை முடிவுகளில் அவர் தலையிட முடியாதவாறு ஓப்பன்ஹைமருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதி திரும்பப்பெறப்பட்டது.


அந்த சமயத்தில், ஓப்பன்ஹைய்மர் மற்றும் அவரது மனைவி கேத்தரின் ஆகியோர் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், பாபாவின் பரிந்துரையின் பேரில் ஓப்பன்ஹைய்மருக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியக் குடியுரிமையை வழங்க முன்வந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், அதை ஓப்பன்ஹைய்மர் மறுத்துவிட்டார். ஏனெனில் அவர் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படும் வரை அமெரிக்காவை விட்டு வெளியேறுவது முறையல்ல என்று அவர் கருதினார்.