பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துது. இந்நிலையில், 202 இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு, அவர்கள் அதை செய்துதான் காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியுள்ளது. அவர்கள் கூறுவது எதைப் பற்றி தெரியுமா.?
பிரசாரத்தின் போது மக்கள் ஆதரவை பெற்ற பிரசாந்த் கிஷோர்
பீகார் தேர்தலில், வேலையின்மை, இடம் பெயர்வு, தொழில் பற்றாக்குறை போன்ற பல்வேறு முக்கியமான பிரச்னைகளை முன்வைத்து, அதிக அளவில் பிரசாரத்தில் ஈடுபட்டது பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி.
நாட்டில் பல கட்சிகளுக்கு ஐடியா கொடுத்து அவர்களை அரியணை ஏறச் செய்த பிரசாந்த் கிஷோ, தனது கட்சிக்கு ஒரு வியூகம் வகுக்காமலா இருந்திருப்பார். ஆம், அதில் ஒன்று அவரது பாத யாத்திரை. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவர் பாத யாத்திரை மேற்கொண்ட போது, மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது.
தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஜன் சுராஜ் கட்சி
பாத யாத்திரையின் போது கிடைத்த மக்களின் ஆதரவை நம்பி, தேர்தலில் தனித்து களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி, கடைசியில் ஒரு இடத்தில் கூட வெற்றிக் கனியை பறிக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக, ஓரிரு இடங்களை தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது ஜன் சுராஜ். பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அதிக அளவில் பிரசாரம் செய்த போதிலும், தங்களுக்கு ஆதரவாக அவர்களால் வாக்குகளை பெற முடியாமல் போனது.
ஜன் சுராஜின் குற்றச்சாட்டு என்ன.?
இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், இந்த சட்டசபை தேர்தல் முடிவுகளால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்தார். ஆனாலும், அதனால் அப்செட் ஆகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சி ஒரு இடத்தை கூட வெல்லவில் என்றாலும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை தொடர்ந்து எதிர்ப்போம் என்று அவர் கூறினார். மேலும், இந்த தீர்ப்பு, மக்கள் ராஷ்ரிய ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பதை நிரூபிப்பதாக தெரிவித்தார். மேலும், ஆர்ஜேடி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, தங்கள் வாக்குகள் என்டிஏவுக்கு மாறியதாகவும் அவர் கூறினார்.
பீகாரில், ஆளும் என்டிஏ அரசு, பெண்களின் கணக்குகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்தது. அது தான் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது என அவர் சுட்டிக்காட்டினார். பீகாரில் உள்ள ஒவ்வொரு பெண்களுடைய வங்கிக் கணக்கிலும், தொழில் தொடங்கும் வகையில் தலா 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது என்றம், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபோதிலும், இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக உதய் சிங் குற்றம்சாட்டினார்.
முக்யமந்திரி மகிளா ரோஸ்கர் யோஜனாவின் கீழ் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 ரூபாய் வழங்குவதற்கான NDA-வின் முடிவு, சட்டமன்ற முடிவுகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
“தேர்தல் முடிவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை - முறைகேடு நடந்துள்ளது“
இதற்கிடையே, பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கட்சியின் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று ஜன் சுராஜ் கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி கூறியுள்ளார். தேர்தலின் போது முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"தேர்தல் முடிவுகள் எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அவை அறிவிக்கப்பட்டதிலிருந்து, என்ன தவறு நடந்தது என்பதற்கான பல்வேறு அம்சங்களை பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம். தேர்தலின் போது நடந்த முறைகேடுகளை நிராகரிக்க முடியாத ஒரு வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.