ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திற்கு செல்லும் பாதையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், யாத்ரீகர்கள் பல காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு - 5 பேர் உயிரிழந்த சோகம்
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திற்கு செல்லும் பாதையில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாத்ரீகர்கள் சிலர் காயமடைந்த நிலையில், அவர்கள் தற்போது கத்ராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திரை நிறுத்தம்
நிலச்சரிவு ஏற்பட்ட ஆத்க்வாரியில் உள்ள இந்தர்பிரஸ்தா போஜ்னாலயா அருகே, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, வைஷ்ணவி தேவி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆலய நிர்வாகம், “அத்க்வாரியில் உள்ள இந்தர்பிரஸ்தா போஜ்னாலயா அருகே நிலச்சரிவு சம்பவம் ஏற்பட்டுள்ளது, சிலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேவையான மனிதவளம் மற்றும் இயந்திரங்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன“ என்று பதிவிட்டுள்ளது.
உயிரிழப்பு ஏற்பட்டது எப்படி.?
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேரும், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேரும் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
அங்கு மேக வெடிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆற்றங்கரை அருகே உள்ள மக்கள், அங்கிருந்து விலகி எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது வான்லை ஆய்வு மையம். அதேபோல், டெல்லிக்கம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, தாவி, ரவி ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கதுவாவில், ரவி நதியின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கை, கிஷ்த்வார் மாவட்டத்துடன் இணைக்கும் சிந்தான் டாப் கணவாய் மூடப்பட்டுள்ளது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள சந்தர்கோட், கேலா மோர் மற்றும் பேட்டரி செஷ்மா ஆகிய மலைகளிலிருந்து கற்கள் விழுந்ததால், முன்னெச்சரிக்கை ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.