J&K Accident: ஜம்மு & காஷ்மீரில் தோடாவின் அசார் பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 25 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்ட 19 பேர் கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நடந்த பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர்ன் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மீட்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் விபத்துக்கான சரியான காரணங்களும் இதுவரை வெளியாகவில்லை.
நடந்தது என்ன?
JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் 40-க்கும் அதிகமானோர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் ட்ருங்கல்-அசார் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, 300 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் தகவல்:
விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “விபத்து தொடர்பாக கேள்விப்பட்டதும் தோடா மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். தேவைப்பட்டால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.