ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாமில் புர்கா அணிந்த ஒருவர் வெடிகுண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பு முகாம் மீது பர்தா அணிந்த ஒருவர் நேற்று வெடிகுண்டு வீசுவது கேமராவில் சிக்கியது. அந்த வீடியோவில், அந்த நபர் நடுரோட்டில் நின்று தனது பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து அவசர அவசரமாக சிஆர்பிஎஃப் பதுங்கு குழியில் வீசுவதைக் காணலாம்.


அப்போது, சாலையில் ஒன்றிரண்டு பேரும், இரு சக்கர வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. வெடிகுண்டை வீசிய உடனேயே, அவர் அந்த இடத்தை விட்டு ஓடுவதைக் காணலாம். இந்த சம்பவத்தின் வீடியோவை ANI செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.  






புர்கா அணிந்தவர் சிஆர்பிஎஃப் முகாமில் பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசினார். இந்த தாக்குதலில் போலீசார் ஒருவர் மற்றும்  சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர்.


அப்பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்திய நபரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண பாதுகாப்பு அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்தனர். தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.


தாக்குதல் நடத்திய நபரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


“சோபூரில் உள்ள சிஆர்பிஎஃப் பதுங்கு குழி மீது நேற்று வெடிகுண்டு வீசிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்” என்று காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறினார்.


கடந்த 10 நாட்களில் பள்ளத்தாக்கில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது கையெறி குண்டு வீசப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக மார்ச் 19 ஆம் தேதி சிஆர்பிஎஃப் பாபாபோரா முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர. அதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். பயங்கரவாதக் குற்றச் செயலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.