'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' :


இந்தி மொழித் திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. 


பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதன் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் டெல்லியில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் பதில் அளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”இந்த படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு கோரி இருக்கிறார்கள் பாஜகவினர்.  






ஏன் அப்படி கேட்கிறீர்கள்? நீங்கள் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள் எனில்  இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு கேட்டிருக்க வேண்டும். அங்கு வெளியிடுவதற்கு எந்த வரியும் கிடையாது. ஒரே நாளில் அனைவராலும் பார்க்க முடியும். அப்போது அரசிடம் வரிவிலக்கு கோர வேண்டிய அவசியம் இருக்காது. காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர். நீங்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை பார்த்து வருகிறீர்கள்” என்று பதில் அளித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி பதிலால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. ஆம் ஆத்மி கட்சியினர் மேஜையைத் தட்டி ஆரவாரப்படுத்தினர். இது அங்கிருந்த பாஜகவினரை கோபமடையச் செய்தது.  அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிலுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.


வீடு முற்றுகை...


இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், கெஜ்ரிவாலின் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு  நின்ற போலீசாரையும் மீறி தடுப்புகளை தாண்டி வீட்டின் வாசலுக்கே சென்றனர். சிசிடிவி கேமராக்களையும், தடுப்புகளையும் உடைத்தெறிந்தனர். சிவப்பு பெயிண்டை வாசல் கேட்டிலும், சுற்றுச்சுவரிலும் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.






இது குறித்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது. தேர்தலில் தோற்கடிக்க முடியாத காரணத்தால் தற்போது நாச வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது. குண்டர்கள் போலீசாரின் உதவியுடனே கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டனர். குண்டர்களின் நாசவேலைக்கு போலீசாரே உதவி புரிந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.