Jammu and Kashmir : பயங்கரவாதம், சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து பறிப்பு என தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் ஜம்மு காஷ்மீரில் அடுத்த பிரச்னை உருவாகியுள்ளது. வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பிரச்னைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.


ஒரு பக்கம் பயங்கரவாதிகள் என்றால் மறுபக்கம் ராணுவம் தங்களை அடக்குவதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், போதாகுறைக்கு அதன் மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீரில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்:


இந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், தேர்தல் நடத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. 


இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்றி இருக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள், அடுத்ததாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி தவிக்க போகின்றனர். மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 30,000 உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறுகிறது.


சாலை, குடிநீர் உள்பட மக்களின் நேரடி பிரச்சனைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் தீர்த்து வைத்து வருகின்றனர். தற்போது, அவர்களின் பதவிக்காலம் நிறைவுபெற உள்ளதால் அரசு இயந்திரமே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து அரசு அரப்பில் இருந்து தெளிவான விளக்கம் வரவில்லை.


என்னதான் பிரச்னை?


தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகே தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கும் சூழலில், மக்களின் ஜனநாயக உரிமைகள் வஞ்சிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கடைசியாக, கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, 27,281 பேர் பஞ்சாயத்து உறுப்பினர்களாகவும் கிராம தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 


இதுகுறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுதையில், "தொகுதி மறுசீரமைப்பு செய்த பின்னரே தேர்தலை நடத்த முடியும். கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி, பஞ்சாயத்து ராஜ் துறை, ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதி மேம்பாட்டு அதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியது.


நகராட்சி வார்டுகள் மற்றும் பஞ்சாயத்து தொகுதிகள் ஒவ்வொன்றிலும் முடிந்தவரை சம எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருக்கும் வகையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது" என்றார்.


தற்போதைக்கு, ஜம்மு காஷ்மீரின் மக்கள் பிரதிநிதிகளாக 6 மக்களவை உறுப்பினர்களும் 1 மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என யாரும் இல்லை. 20 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் மட்டும் இயங்கி வருகிறது.