2022 ஆம் ஆண்டில் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 56 பேர் உள்பட 186 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் டிஜிபி திலாப் சிங் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:
இந்த 2022ஆம் ஆண்டு மொத்தம் 186 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்களில் 56 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இதனால் ஜம்மு யூனியன் பிரதேசத்தில் ஜீரோ பயங்கரவாத தாக்குதல் நோக்கி வெற்றிகரமாக முன்னேறி வருகிறோம்.
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் 100 இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைந்தனர். இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. இப்போது யூனியன் பிரதேசத்துக்குள் 100க்கும் குறைவான தீவிரவாதிகளே இருக்கலாம் என்று கணிக்கிறோம்.
பயங்கரவாத அமைப்புகளில் இணைபவர்களின் ஆயுள் காலம் கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது தற்போது மிகப் பெரிய அளவில் குறைந்திருப்பதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பயங்கரவாத அமைப்புகளில் புதிதாக இணைந்த 65 பயங்கரவாதிகளில் 58 பேர், அவர்கள் இணைந்த முதல் மாதத்திலேயே கொல்லப்பட்டுவிட்டனர் எனத் தெரிகிறது.
ஆயுதங்கள் பறிமுதல்:
2022ல் 360 ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 121 துப்பாக்கிகள் ஏ.கே.ரகத்தைச் சேர்ந்தவை. 231 கைத்துப்பாக்கிகள். இவைமட்டுமின்றி, வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் உள்ளிட்டவையும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
பொதுமக்கள் பலி எவ்வளவு?
தீவிரவாதிகள் உயிரிழப்பை பட்டியலிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் காவல்துறை அங்கே அப்பாவி பொதுமக்கள் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 15 பேர் முஸ்லீம்கள். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் அடங்குவர். இவர்களுடன் காஷ்மீர் பண்டிட்டுகள் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடைசியாக நடந்த டிரக் அட்டாக்:
கடைசியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் டிரக் மூலம் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை சந்தேகத்திற்கு இடமாக எல்லைக்குள் நுழைந்த டிரக்-ஐ மடக்கி பிடித்த உள்ளூர் போலீசார் சோதனை செய்ய முயன்ற போது உள்ளே பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு சுதாரித்துக் கொண்ட போலீசார், எதிர்தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளுக்கு பதிலடி மிகவும் பரபரப்பாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் .
இது தான் இந்த ஆண்டு காஷ்மீரில் இதுவரை நடந்த கடைசி தாக்குதலாக உள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி இப்போதிருந்தே எல்லையில் இந்திய ராணுவம் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. காஷ்மீருக்கு உள்ளேயும் ஆங்காங்கே தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.