Jammu And Kashmir Govt Formation: ஜம்மு & காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையில் அமைய உள்ள அமைச்சரவை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பதவியேற்கிறார் உமர் அப்துல்லா:
ஜம்மு&காஷ்மீரில் பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, உமர் அப்துல்லா முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. காலை 11:30 மணிக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவால் முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் பட்டியல் தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸில் இருந்து 5 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது. மூன்று சுயேட்சைகளும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவியும் காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
அமைச்சரவை பட்டியல் உத்தேச விவரம்:
சகினா இடூ: நான்கு முறை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தேசிய மாநாடு கட்சிய சேர்ந்த சகினா இடூ, மீண்டும் யூனியன் பிரதேச அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது. தேசிய மாநாட்டு கட்சி சார்பில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பெண் எம்எல்ஏக்களில் சகீனா இடூவும் ஒருவர். சகினா தெற்கு காஷ்மீரில் உள்ள தம்ஹால் ஹஞ்சிபோரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அலி முகமது சாகர்: ஸ்ரீநகர் எம்.எல்.ஏ அலி முகமது சாகரும் அமைச்சரவையில் இடம்பெறலாம். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தேசிய மாநாட்டின் பொதுச் செயலாளராகவும், பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா இருவரின் நெருங்கிய நம்பிக்கையாளராகவும் இருக்கிறார் இவர் ஸ்ரீநகரின் கன்யார் சட்டமன்றப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஹஸ்னைன் மசூடி: முன்னாள் மக்களவை எம்பியான தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏ மசூதி, புல்வாமாவின் பாம்பூர் சட்டமன்றப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஜாவேத் ராணா: ராணா நான்கு முறை எம்எல்ஏவாகவும், அதிலும் மூன்று முறை மெந்தார் தொகுதி எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெறக்கூடியவர்களில் இவரும் ஒருவர்.
சைபுல்லா மிர்: சைபுல்லா மிர்ரும் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குப்வாராவில் இருந்து நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர் மிர்.
சுரிந்தர் சவுத்ரி: நவ்ஷேராவில் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவை தோற்கடித்த தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சுரிந்தர் சவுத்ரியும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. சௌத்ரி மற்றும் அர்ஜுன் சிங் ராஜு ஆகியோர் NC அரசாங்கத்தில் உள்ள இரண்டு இந்து எம்.எல்.ஏக்கள் ஆகும்.
சுயேட்சைகள்: தேசிய மாநாடு கட்சியின் கூட்டணிக்கு ஆதரவு அளித்த ஜம்மு பிரிவைச் சேர்ந்த ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில், பியாரே லால் ஷர்மா மற்றும் சதீஷ் சர்மா மற்றும் டாக்டர் ரோமேஷ்வர் சிங் உட்பட மூன்று எம்.எல்.ஏக்களில் இருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம்.
இதற்கிடையில், உமர் அப்துல்லா அனைத்து நிர்வாக செயலாளர்களின் கூட்டத்திற்கு புதன்கிழமை மாலை 3 மணிக்கு சிவில் செயலகத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 90 இடங்களில் NC 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. 95 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதோடு, 5 சுயேச்சை மற்றும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏவின் ஆதரவால், இந்த கூட்டணி ஆட்சி மேலும் வலுப்பெற்றுள்ளது.