ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் அதற்கு ராணுவம் பதிலடி கொடுப்பதும் அதிகரித்து வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைந்த பிறகும், அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தொடரும் பதற்றம்:

Continues below advertisement

இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹல்கன் கலி பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து இந்த என்கவுன்டர் நடந்தது.

நேற்று முன்தினம், இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிதகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் புலம்பெயர்ந்தோர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புத்காம் மாவட்டத்தில் சுட்டு கொல்லப்பட்டனர்.

அதேபோல, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதை கட்டுமான தளத்தில் உள்ளூர் மருத்துவர் மற்றும் பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உட்பட ஏழு பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இரண்டு பயங்கரவாதிகள் அவுட்:

பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பது, புதிதாக அமைக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும், இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சமீபத்தில், பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மரணம் அடைந்தனர்.