கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்ப, மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று (பிப்.7) கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் உள்ள கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை, காவித் துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்பினர். பதிலுக்கு மாணவி அல்லாஹூ அக்பர் என்று கைகளை உயர்த்தி, கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் அங்கு வந்த கல்லூரி நிர்வாகிகள் மாணவியைக் கல்லூரி வளாகத்துக்குள் அனுப்பினர். அங்கு குழுமி இருந்த மாணவர்களைக் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.
இதற்கிடையே ஹிஜாப் விவகாரம் குறித்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''விருப்பங்களுக்கு இடமில்லை. அரசியலமைப்புச் சட்டப்படியே நடப்போம்'' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கூடுதல் செய்திகளுக்கு: Karnataka Hijab Row |விருப்பங்களுக்கு இடமில்லை; அரசியலமைப்புப்படியே நடப்போம்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து