Jaisalmer Bus Fire: பேருந்தின் பின்பக்கத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த கோர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

ஓடும் பேருந்தில் தீ விபத்து - 20 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஓடும் பேருந்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜோத்பூரை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தின் பின்புறத்தில், புறப்பட்ட சில கிலோ மீட்டர் தூரத்திலேயே திடீரென தீ பற்றியுள்ளது. இதில் 19 பேர் பேருந்திலேயே முற்றிலுமாக எரிந்து உயிரிழக்க, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மேலும் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து சிதைந்து இருப்பதால், இறந்தவர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அடையாளங்களை உறுதிப்படுத்த டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

மின் கசிவு - இல்லாத அவசர கால கதவு:

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக உள்ளூர் எம்.எல்.ஏ மஹந்த் பிரதாப் பூரி தெரிவித்தார். "பாதுகாப்பு விதிமுறைகளின்படி பேருந்து கட்டப்பட்டு, பின்புற வெளியேறும் கதவு சேர்க்கப்பட்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். தரமற்ற வடிவமைப்பே அதிக இறப்பு எண்ணிக்கைக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தகவலறிந்து நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​பேருந்து ஏற்கனவே முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து இருந்ததாக  தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சில பயணிகளை உள்ளூர்வாசிகள் மீட்டனர், ஆனால் உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியாமல் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்து ஜெய்சால்மரின் ஜவஹர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. சிலர்  உயர் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர், முதலமைச்சர் இரங்கல்:

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவியையும் உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளிடம் முதலமைச்சர் உத்தரவிட்டார். பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில் தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதேபோன்று குடியரசு தலைவர், ராஜாஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.