ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தஷ்ரத் குமாவாத் என்பவர் தனது மனைவிக்கு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜீவனாம்ச பணத்தை வழங்காத காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தஷ்ரத்தின் குடும்ப உறுப்பினர்கள் அவர் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றம் முன்பு வழங்கினர். அதுதான் இன்று இந்தியா முழுவதும் பேச்சு பொருளாகி உள்ளது. 


ஒருவர் பணம் கேட்டால் ஒரு சிலர் வங்கியின் செக்கை கொடுத்திருப்பார்கள். ஒரு சிலர் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்திருப்பார்கள். ஒரு சிலர் அதையும் மீறி விரைவில் செல்லாமல் போகும் 2000 ரூபாய் நோட்களை கொடுத்து தங்களது பழியை தீர்த்திருப்பார்கள். ஆனால் இங்கு குடும்பம் ரூ. 50 ஆயிரத்தை சில்லறை நாணயங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். 


தஷ்ரத்தின் குடும்பம் ஒரு படி மேலே சென்று ரூ. 55,000 மதிப்புள்ள தொகையை முழுவதும் ரூபாய் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக நிரப்பி ஜெய்ப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். மொத்தம் ஏழு பெட்டிகள் கொண்ட நாணயங்களில் எடை சுமார் 280 கிலோ ஆகும். 


இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி தஷ்ரத்தின் குடும்பத்தாரிடம் என்ன இது? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர்கள், இது வரதட்சணை கொடுமை வழக்கில் தசரத்தின் மனைக்கு கொடுக்கப்பட்ட ஜீவனாம்ச தொகைக்கான தொகை என்று தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து, நீதிபதி என்ன இருந்தாலும் பணம் பணம்தான் இதை வேண்டாம் என்று புறந்தள்ளிவிட முடியாது. இந்த பணத்தை எண்ணி பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். 


வழக்கு விவரம்:


சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு தஷ்ரத் குமாவத், 12 ஆண்டுகளுக்கு முன்பு சீமாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில வருடங்களில் சீமா தனது கணவர் வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கானது கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சீமாவுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 2.25 லட்சத்தை தசரத் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் அளித்த உத்தரவை தசரத் ஏற்கவில்லை என்பதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 


இதன் காரணமாக, தஷ்ரத் குடும்பத்தினர் பராமரிப்புப் பணத்தில் ஒரு பகுதியை, 55,000 ரூபாயை சீமாவுக்கு வழங்க முடிவு செய்தனர். பணம் முழுவதையும் நாணயங்களாகச் செலுத்தினார்.  இதையடுத்து சீமாவின் வழக்கறிஞர் ராம்பிரகாஷ் குமாவத், நாணயங்களில் தொகையை வழங்குவது வேண்டுமென்றே துன்புறுத்தும் செயல் என்றும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் வாதிட்டார்.


தஷ்ரத்தின் வழக்கறிஞர் ராமன் குப்தா, நாணயங்கள் செல்லுபடியாகும் இந்திய நாணயம், எனவே அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நாணயங்களை முறையாக எண்ணுவதற்கு வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி திட்டமிட்டுள்ளது.