அதில், பாஜக, காங்கிரஸ் உட்பட எட்டு தேசிய கட்சிகளில், மத்தியில் ஆளும் பாஜகதான் பணக்காரக் கட்சிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் பாஜக 155 சதவீத கூடுதல் வருவாயை ஈட்டியுள்ள சூழலில், ஆச்சரியம் அளிக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ 633 சதவீதம் அளவுக்கு கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. குறிப்பாக நூற்றாண்டு பழமையான காங்கிரஸ் கட்சியை விட, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் நிதி கிடைத்துள்ளது.
ரூ.1,917 கோடி நிதி பெற்ற பாஜக:
தேர்தல் ஆணையப் புள்ளிவிவரங்களின் படி, பாஜக கடந்த ஆண்டில் 1, 917 கோடி ரூபாயும், அதற்கு முந்தைய ஆண்டில் 752 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 545.75 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி, முந்தைய ஆண்டில் 74 கோடி ரூபாயை மட்டுமே ஈட்டியிருந்தது. 2020-21 நிதியாண்டில் வெறும் ரூ 285.76 கோடியை மட்டுமே நிதி உதவியாக பெற்று இருந்த காங்கிரஸ், கடந்த நிதியாண்டில் 89.4 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாக அதாவது 2021-22 நிதியாண்டில் ரூ 541.27 கோடியை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் 171.05 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்று இருந்த CPI-M கட்சியின் கடந்த ஆண்டு நிதி, 5.15 சதவிகிதம் அதாவது 162.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் 8 தேசிய கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.3,289 கோடி ஆகும். இதில், பாஜக மற்றும் 58 சதவிகித நிதியை பெற்றுள்ளது.
திமுக முதலிடம்:
மாநிலக் கட்சிகளில் திமுக 318.75 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்று, பணக்கார கட்சிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, ஒடிஷாவில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி ரூ.307.29 கோடியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 17.6 கோடி ரூபாயை நிதியாக பெற்று இருந்த ஆம் ஆத்மி கட்சி, நடப்பாண்டில் 153 சதவிகித, கூடுதலாக அதாவது 44.54 கோடி நிதியை பெற்றுள்ளது.