காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியின் மீது விருப்பமில்லை என அக்கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, எதிர்கட்சிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.


எதிர்கட்சிகள் கூட்டம்:


காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்கட்சிகள் பங்கேற்றுள்ள கூட்டம் பெங்களூருவில் தொடங்கி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவை வீழ்த்துவதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது, கூட்டணி அமைத்து பல்வேறு தொகுதிகளில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது, குழு ஒன்றை அமைத்து கூட்டணி திட்டங்களை வகுப்பது, தேர்தல் பணிகளை முன்னெடுப்பது, முக்கிய அம்சங்களை விவாதிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது குறித்தும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பிரதமர் பதவியில் விருப்பமில்லை:


இந்நிலையில் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, “ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோதே சொல்லியிருக்கிறேன், காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்திலோ, பிரதமர் பதவியிலோ விருப்பமில்லை. இந்த கூட்டத்தின் மூலம் எங்களுக்கான சக்தியை திரட்ட வேண்டும் என்பது எங்களது நோக்கமில்லை. நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்.


”ஆட்சியை கவிழ்க்கிறார்கள்”


எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக ஒவ்வொரு விசாரணை அமைப்பும் மாறி வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை எதிர்கட்சிகளுக்கு எதிராக வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது தலைவர்கள் சட்ட நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்வதற்காக அவர்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகள் போடப்படுகின்றன. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அரசியலமைப்பு அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவுக்குச் சென்று ஆட்சியைக் கவிழ்க்க, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்குகப்படுகின்றனர். 


”பிரச்னைகளை களைய வேண்டும்”


மாநில அளவில் நம்மில் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் அறிவோம். இந்த வேறுபாடுகள் கருத்தியல் சார்ந்தவை அல்ல. இந்த வேறுபாடுகள் பெரிதாக இல்லை. திரைமறைவில் சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், ஏழைகள், தலித், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள்  நசுக்கப்படுகின்றன. அவர்களின் நலனுக்காக நம்மிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும்” என கார்கே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


வைகோ கோரிக்கை:


இதனிடையே, கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு, இந்திய மக்கள் கூட்டணி என்ற பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.