தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிரரம்ப்' (prarambh) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை புவி வட்டார சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது.
'விக்ரம்-எஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இரண்டு இந்திய செயற்கைக்கோள் மற்றும் ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணிற்கு கொண்டு செல்கிறது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட்டின் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட விக்ரம்-எஸ் ராக்கெட்டை, நாளை (நவம்பர் 18ஆம் தேதி) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது. முன்னதாக விக்ரம்-எஸ் ராக்கெட்டை, நவம்பர் 15ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவ இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனை ஸ்கைரூட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில் நாளை காலை 11 முதல் 12 மணிக்குள் விக்ரம் எஸ் விண்ணில் சீறிப்பாய தயார் நிலையில் உள்ளது எனவும், இறுதிகட்ட ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாக பரத் டாகா கூறுகையில், “வானிலை நிலையைப் பொறுத்து ராக்கெட் ஏவுதல் முடிவு செய்யப்படும். விக்ரம்-எஸ் single stage sub-orbital ராக்கெட்டாகும். 3 வாடிக்கையாளர்களின் செயற்கைகோள் சுமந்து செல்கிறது. இது அடுத்தடுத்து ஏவப்பட உள்ள விக்ரம் சீரிஸ் ராக்கெட்களின் தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் உதவும்” என்று கூறினார். மேலும், 3 விக்ரம் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில், பல்வேறு திட மற்றும் கிரையோஜெனிக் எரிபொருட்கள் பயன்படுத்தி 290 கிலோ முதல் 560 கிலோ வரையிலான பேலோடுகளை sun-synchronous துருவ சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல தயாரிக்கப்படுகிறது” என்றார்.
ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட துணை-சுற்றுப்பாதை விமானம் போன்றதுதான் இதுவும். இது சுற்றுப்பாதை வேகத்தை விட மெதுவாக பயணிக்கும் தன்மை கொண்டதாகும். அதாவது விண்வெளியை சுற்ற போதுமான வேகம் கொண்டிருக்கும், ஆனால் பூமியைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் தங்குவதற்கு போதுமான வேகம் இவற்றுக்குக் கிடையாது.
இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று நெருக்கடி பெரும் சவாலாக இருந்தது. கடின உழைப்பால் தற்போது ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த திட்டத்திற்கு 'பிரரம்ப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கு ரூ.403 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு 'விக்ரம் சாராபாய்' நினைவாக 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ளது.
பிரரம்ப் திட்டம்
“இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) மற்றும் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத் திறமை ஆகியவற்றால் மட்டுமே நாங்கள் எங்கள் விக்ரம்-எஸ் ராக்கெட் பயணத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் உருவாக்கி தயார்படுத்த முடிகிறது. இந்திய அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையால் பெரிதும் பயனடைந்த இந்திய தனியார் விண்வெளித் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட எங்களின் வழித்தோன்றல் பணியான ‘பிரரம்ப்’ ஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று Skyroot இன் CEO மற்றும் இணை நிறுவனர் பவன் குமார் சந்த்னா கூறினார்.
ஸ்கைரூட் தனது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முதல் தனியார் நிறுவனமாக இருக்கும் என்றாலும், அடுத்தடுத்த திட்டங்கள் விரைவில் வெவ்வேறு நிறுவனங்களால் செயல்படுத்த ஏற்கனவே தயாராகி விட்டன. எடுத்துக்காட்டாக, அக்னிகுல் காஸ்மோஸ், அதன் செமி கிரையோஜெனிக் அக்னிலெட் இயந்திரம் செவ்வாயன்று திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா பூமத்திய ரேகை ஏவுதளத்தில் (TERLS) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) செங்குத்து சோதனை வசதியில் 15 வினாடிகள் சோதனை செய்யப்பட்டது.
இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களும் (SSLV) விரைவில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. தனியார் செயற்கைக்கோள் பணிகளைப் பொறுத்தவரை, இஸ்ரோவின் கனமான ஏவுகணை வாகனமான மார்க் III 36 OneWeb செயற்கைக்கோள்களை ஏவியது. இந்த நிறுவனத்திற்காக 36 செயற்கைக்கோள்கள் கொண்ட மற்றொரு கப்பற்படையை விண்வெளி நிறுவனம் ஏவவுள்ளது. இது தவிர, விண்வெளி நிறுவனம் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நான்கு செயற்கைக்கோள்களையும் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.