CMS 03 LVM 3 ISRO: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் CMS-03 செயற்கைக்கோள், தொலைதொடர்பு துறையில் முக்கிய பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இதுவரை இல்லாத சம்பவம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வரலாற்றில், இதுவரை இல்லாத அளவில் அதிகப்படியான எடை கொண்ட தொலைதொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள,சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள CMS-03 செயற்கைக்கோளானது, விண்வெளி அடிப்படையிலான ராணுவ மற்றும் தகவல் தொடர்பு திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
GSAT-7R என்றும் அழைக்கப்படும் CMS-03, சுமார் 4,410 கிலோ எடை கொண்டது. புவிசார் பரிமாற்ற சுற்றுப்பாதை (GTO) பணிகளுக்கான இந்திய செயற்கைக்கோள் பொறியியலின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM3 மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது முன்னர் சந்திரயான்-3 போன்ற வரலாற்று சிறப்புமிக்க செயற்கைகோளை விண்வெளிக்கு ஏந்தி சென்றது குறிப்பிடத்தக்கது.
CMS-03 செயற்கைக்கோள் என்ன செய்யும்?
CMS-03 செயற்கைக்கோளின் பிரதான பணி என்பது இந்திய நிலப்பரப்பு உட்பட பரந்த கடல்சார் பகுதியில், கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் விதமாக மல்டி பேண்ட் தொலைதொடர்பு சேவைகளை வழங்குவதாகும். குறிப்பாக இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக அலைவரிசை மற்றும் வாய்ஸ், டேட்டா மற்றும் வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பான இணைப்புகளை வழங்கவும் உதவ உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு, கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும், கடற்படை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும்.
CMS-03 ஆனது C, எக்ஸ்டெண்டட் C மற்றும் Ku பேண்ட்கள் மீது இயங்கும் அடுத்த தலைமுறை பேலோட் டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் கடல்சார் தகவல் தொடர்பு திறன்களை கணிசமாக மேம்படுத்துகிறது. புதிய செயற்கைக்கோள் பழைய GSAT-7 (ருக்மினி) செயற்கைக்கோளை திறம்பட மாற்றும். இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் பரப்பளவை வலுப்படுத்துவதோடு, முக்கியமான கடல் மண்டலங்களில் மேம்பட்ட ராணுவ நெட்வொர்க்குகளை இயக்கும் இந்தியாவின் திறனை வலுப்படுத்தும்.
LVM 3 ராக்கெட் எப்போது விண்ணில் பாயும்?
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, நாளை மாலை 5.26 மணிக்கு LVM3 ராக்கெட்டானது விண்ணில் இலக்கை நோக்கி பாயவுள்ளது. இதற்கான கவுண்டவுனும் தொடங்கியுள்ளது. ராக்கெட்டை ஏவும் நிகழ்வை அனைவரும் பார்க்கும் வகையில் யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையில், பார்வையாளர்கள் இஸ்ரோவின் வெளியீட்டு வீடியோ கேலரியில் இருந்து நேரடியாக ஏவுதலைப் பார்க்க பதிவு செய்யலாம்.