விண்வெளியில், இஸ்ரோ வளர்த்த செடியில் இலைகள் வளர்ந்திருக்கும் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 


விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்கள்:


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  கடந்த மாதம் டிசம்பர் 30 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து PSLV-C60 ராக்கெட் மூலமாக,  ஸ்பேஸ் டாக்கிங் சோதனைக்காக இரண்டு செயற்கைகோள்களை  விண்ணில் செலுத்தியது. 


விண்கலம் ஏ (SDX01) மற்றும் விண்கலம் B (SDX02) ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு,பூமிக்கு மேலே 475 கிமீ தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக போற்றப்படும் SpaDeX பணியானது, ஸ்பேஸ் டாக்கிங் என்ற செயல்முறையை மேற்கொள்ளவுள்ளது. அதாவது இரண்டு செயற்கைக்கோள்களை இணைப்பது என்பதுதான் திட்டம்.  


 






முக்கியத்துவம்:


இத்திட்டமானது, மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றிற்கு, இத்திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என கூறப்படுகிறது. 


220 கிலோ எடையுள்ள இரண்டு விண்கலங்கள் (SDX01) மற்றும் Target (SDX02) என ஒரே வேகத்திலும் தூரத்தில் ஒன்றாக பயணிக்கும். மேலும் தொடர்ச்சியான சுழற்சிகளுக்குப் பிறகு, அதன் இடைவெளி குறைக்கப்படும். ஆரம்பத்தில் 5 கிமீ தொலைவில் வைக்கப்படும் இந்த செயற்கைக்கோள்கள், ஒன்றாக இணைவதற்கு முன் வெறும் 3 மீட்டர் இடைவெளியில் பிரிக்கப்படும். இந்த சிக்கலான செயல்முறையானது, இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. 


விண்வெளியில் தாவரம்:




படம்: விண்வெளியில் செடி


இந்த தருணத்தில், இஸ்ரோ மற்றொரு சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால், POEM என்ற சோதனை அடிப்படையில், தாவரங்களை முளைக்க செய்வதாகும். விண்வெளியில் குறைந்த புவி ஈர்ப்பு  விசையில் தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய விண்வெளிக்கு தட்டைப்பயிறை வைத்து சோதிக்கும் முயற்சியும் இதில் அடங்கியிருந்தது. இப்படி ஒரு  சோதனையை இஸ்ரோ விண்வெளியில் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.






சில தினங்களுக்கு முன்பு, தட்டைபயிறானது ( சில இடங்களில் காராமணி என அழைக்கப்படுகிறது ) முளைக்க ஆரம்பித்தது. இந்நிலையில், இன்று இலைகள் முளைத்ததாக , அதன் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 
இது, இந்தியாவின் புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுவதால், பலரும் இஸ்ரோவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Also Read: TN Weather: இந்த மாவட்டம் குளிரால் உறைய போகுது.! தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்.?