இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் நேற்று மேற்கொண்ட அதிரடி தாக்குதல்களின்போது இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் பெரிய அளவில் உதவின. குறிப்பாக, Barak 8 எனப்படும் மீடியம் ரேஞ் ஏவுகணைதான் பதிண்டா உள்ளிட்ட ராணுவ எல்லைகளை பாதுகாத்து வருகிறது. இதை தவிர, கராச்சி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் தீவிரவாத நிலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட ஹாரோப் ட்ரோன்கள்தான் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத நிலைகளின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது.
ஏவுகணைகளை ஏவியும் ட்ரோன்களை அனுப்பியும் அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளிலும் ராணுவ நிலைகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், பாகிஸ்தான் முயற்சிகளை வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் முறியடித்தது மட்டும் இல்லாமல் தற்காத்து கொள்வதிலும் இஸ்ரேல் ஆயுதங்கள் பெரிய அளவில் பங்கு வகித்துள்ளன.
பஞ்சாபை காக்கும் எல்லைச்சாமி:
கடந்த 2017ஆம் ஆண்டு, மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலிடமிருந்து 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் Barak 8 எனப்படும் நிலத்தில் இருந்து வானுக்கு சென்று தாக்கும் மீடியம் ரேஞ் ஏவுகணைகளை (MR-SAM) இந்தியா வாங்கியது. பஞ்சாப் பதிண்டா முன்கள ராணுவ தளத்தை பாதுகாக்க இந்த ஏவுகணைகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதை தவிர, கராச்சி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் தீவிரவாத நிலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட ஹாரோப் ட்ரோன்கள்தான் பயன்படுத்தப்பட்டன. இந்த ட்ரோன்கள், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' இன்போது, ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்தியா. இந்த ஆபரேஷனில் ட்ரோன்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, இஸ்ரேல் ட்ரோன்கள் இந்தியாவுக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது. லாகூரில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் HQ-9 ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டன. முக்கியமான ரேடார் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இஸ்ரேலுடன் மோடி தலைமையிலான அரசு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. காலம் காலமாக பாலஸ்தீனத்துடன் இணக்கமாக செயல்பட்டு வந்த இந்திய அரசுகளில் இருந்து மாறுபட்டு, இஸ்ரேலின் முக்கிய கூட்டு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.