இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


கொரோனா தடுப்பூசி: 


நாடு முழுவதும், இதுவரை மொத்தம் 14.19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 9.79  கோடி பேருக்கு முதல் கட்ட  தடுப்பூசியும், 1.03கோடி பேருக்கு இரண்டு கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 


சுகாதாரப் பணியாளர்களில், 92.98 லட்சம் பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 60. 08 லட்சம் பேருக்கு இரண்டு கட்ட தடுப்பூசியும்  போடப்பட்டுள்ளது. 


முண்களப் பணியாளர்களில், 1.19 கோடி பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 63.10 லட்சம் பேருக்கு இரண்டு கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 



 


ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 87.89 சதவீதமாக உள்ளது.                   


தினசரி பாதிப்பு விகிதம்:  இந்தியாவில், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. முதல் அலையின் போது இந்தியாவின் ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பு 97,894  ஆக ( செப்டம்பர் மாத நடுப்பகுதியில்) இருந்தது. அதன்பின், கொரோனா நோய்ப் பரவல் கணிசமாக குறையத் தொடங்கியது. இந்தாண்டு பிப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்தியாவின் ஒரு நாள் பாதிப்பு வெறும் 9,121ஆக குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



 


மாநிலங்கள்: மகாராஷ்டிரா, உத்தர பிரேதேசம் , கர்நாடகா , கேரளா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   



 


மேலும் நாட்டின் அநேக மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் அதன் உச்சகட்ட பாதிப்பை கடந்து விட்டன. உதாரணமாக, தமிழகத்தின் முதல்  கொரோனா பரவலில் 6 ஆயிரத்து 785 என்பதே ஒருநாள் அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. தற்போது 15க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை பதிவிட்டு வருகிறது.  மேலும், தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 5.6 ஆக உள்ளது. தெலுங்கானாவில் இது 7.3 சதவீதமாக உள்ளது. 


 



மகராஷ்டிரா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (_68, 631) அதிகமா இருந்தாலும், அதன் தினசரி பாதிப்பு விகிதம்  0.5 % ஆக உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தினசரி பாதிப்பு வளர்ச்சி 9 சதவீதத்தில் உள்ளது. இதன் காரணமாகவே, அம்மாநிலத்தில் இன்று இரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.   


மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பு வளர்ச்சி 6.4 விகிதமாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு 7வது கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. எஞ்சியுள்ள 34 தொகுதிகளுக்கான, 8வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.