சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்தான பயிற்சியாளர் நாகேந்திராவிடம் எடுத்த பேட்டியிலிருந்து....


2014ம் ஆண்டு ஐ.நா.சபை ஜூன் மாதம் 21ந் தேதியைச் சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது. இதையடுத்து அந்த நாளில் இந்திய அரசு நாடெங்கிலும் யோகா தினத்தை அணுசரிக்கிறது.  இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி யோகா தினச் சிறப்புப் பகிர்வுகளை வெளியிட்டுவருகிறார். 
பிரதமர் மோடியின் யோகா ஆர்வம் குறித்து அவரது தனிப்பட்ட யோகா ஆலோசகரும் இந்திய யோகா கூட்டமைப்பின் தலைவருமான ஹெச்.ஆர். நாகேந்திராவிடம் எடுத்த பேட்டியிலிருந்து...
‘பிரதமர் மோடி தினமும் யோகா சாதகம் செய்வதைத் தொடர்ச்சியாகக் கடைபிடிப்பவர். தனது நெருக்கடியான வேலைப்பளுவுக்கு இடையிலும் விடாமல் தொடர்ச்சியாக யோகா செய்பவர். ஆவர்தன் தியானம் அல்லது சுழற்சி தியானம் எனப்படும் ஒருவித யோகா முறையை அவர் தினமும் செய்கிறார். இந்த தியானம் செய்வதால் உடல் தூண்டப்பட்டு ஒரு ஆழமான அமைதியான நிலைக்கு உடலையும் மனதையும் அது எடுத்துச் செல்லும்.


பிரதமர் மோடி உலகம் முழுவதும் பயணிக்கும்போது கூட விடாமல் யோகா செய்பவர். தனது நேரத்தை யோகாவுக்காக ஒதுக்குவதற்கு அவர் தவறியதேயில்லை. அவரது யோகா ஆர்வம் எத்தகையது என்றால் அவர் வெறும் உடலை வலுப்படுத்தும் ஆசணங்களை மட்டும் செய்பவர் அல்ல. மனதை வலுப்படுத்தி ஆரோக்கியமான உடல்நிலையைப் பேணுவதில் அவர் கவனம் செலுத்துபவர்.  இன்னும் சொல்லப்போனால் இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் தங்கள் உடல்நலனைப் பார்த்துக்கொள்ள யோகா மிகவும் கைகொடுத்தது.  
பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தனர். குடும்பத்துடன் நேரம் செலவிடுகின்றனர். ஆனால் வீட்டிலேயே இருப்பது மக்களிடம் எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கியுள்ளது. இதனால் உண்டாகும் மன அழுத்தத்திலிருந்து மீள யோகா பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது’ என்கிறார் நாகேந்திரா.


ஒவ்வொருவரும் பக்தி யோகா, ஞான யோகா, க்ரியா யோகா, ப்ராணாயாமம் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாகச் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.







உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை யோகா தினமாக அறிவிக்க 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவிற்கு கோரிக்கை விடுத்தார். இதை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநா ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரியளவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. 


இந்நிலையில் இம்முறையும் கொரோனா பரவல் காரணமாக பெரியளவில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்த தினம் தொடர்பாக இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், “கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போர் செய்து கொண்டிருக்கும் சூழலில் யோகா ஒரு நம்பிக்கை தரும் கருவி” எனக் கூறினார். மேலும் அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திலும் பலர் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.
Also Read: சர்வதேச யோகா தினம்: யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?