சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967-ஆக உள்ளது; இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். புலிகளுக்கு உலகின் மிகப்பெரிய பாதுகாப்பான இடமாக இந்தியா உள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN ) பொதுக்குழு கூட்டம் 1969 ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது. மேலும், 1972-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள்தொகைக் கணக்கெடுப்பில் 1872 புலிகளே எஞ்சி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 1972-ஆம் ஆண்டில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்தார். மேலும், அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க 1973ம் ஆண்டு ப்ராஜெக்ட் டைகர் எனும் திட்டம் துவங்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில், 2005-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் டெல்லி-அல்வர்-ஜெய்ப்பூர் சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள சரிஸ்கா சரணாலயத்தில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆரவல்லி மலைத்தொடரில் 800 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்பட்ட பகுதியில், புலிகள் அழிக்கப்பட்டால் மற்ற இடங்களில் அதன் நிலை என்னவாக இருக்கும் என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. சரணாலயத்தில் இருந்து சுமார் 200 கி,மீ தொலைவில் இருந்து இந்திய நாடாளுமன்றம் முதன்முறையாக நிலைமையின் தீவிரத்தை உணர ஆரம்பித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA )ஐ சட்ட பூர்வமாக உருவாக்கியது. உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று 1972 வனவிலங்கு சட்டத்தில் மாற்றம்கொண்டு வந்தது.
குடியிருப்பு பகுதிகளில் அபாயகரமான வனவிலங்கு நுழைந்துவிட்டது, ஊர்மக்கள் அச்சம் போன்ற செய்திகளை நித்தமும் கேட்டு வருகிறோம். இருப்பினும், காட்டுயிர்களை தொல்லையாகவோ, அபாயம் நிறைந்ததாகவோ பார்க்கும் மனோபாவம் இந்தியர்களுக்கு இல்லை என்று கூறப்படுவதுண்டு. இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டரில் சராசரியாக 337 பேர் வசிக்கின்றனர். இதன் காரணமாக, மனிதர் - காட்டுயிர் எதிர்கொள்ளல் (Man - WildLife Conflict) என்பது இங்கே இயல்பானதாகும். 2000 ஆண்டுகால வாழ்வியல் வரலாற்றில் இதுவரை சிவிங்கிப்புலி என்று ஒற்றை ஊன் உண்ணியை மட்டுமே இந்தியா அப்புறப்படுத்தியுள்ளது . ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்புதான் வனவிலங்கு அபாயகரமானது என்ற உணர்வுநிலை ஏற்படுகிறது. உதாரணமாக, பிரிட்டிஷ் இந்தியாவில் 1875-1925 ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 65000 புலிகளும், லட்சக்கணக்கான ஓநாய்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ப்ராஜெக்ட் டைகர் திட்டத்தில் புலிகள் சரணாலயங்கள் முக்கிய பங்கு வகித்தது. தற்போது, நாடு முழுவதும் 50 புலிகள் சரணாலயங்கள் எற்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்தியாவில் உள்ள புலிகளில் சுமார் 30சதவீதம், புலிகள் சரணாலயங்களுக்கு வெளியே தான் வாழ்ந்து வருகின்றன. புலிகள் பாதுகாப்பில், வனத்துறையினரின் பாதுகாவலனாகவும், பொது மக்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். எனவே, சரணாலயங்களைத் தாண்டி மக்களை உள்ளடக்கிய புலிகள் பாதுகாப்பு மேலாண்மை தேவைப்படுகிறது. காடழிப்பு, காட்டு உயிரினங்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், நீண்ட கால தீர்வு போன்ற அணுகுமுறையே சிறந்ததாக அமையும்.