ஹரியானா மாநிலத்தின் கர்னல் சரகத்தின் ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்து வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி பார்தி அரோரா. இவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இவர் விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் தலைமை செயலாளர் மற்றும் மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் விஜய்வர்தன், டிஜிபி மனோஜ்யாதவா ஆகியோருக்கு கடந்த 24-ந் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தான் வரும் 31-ந் தேதியுடன் பணியை நிறைவு செய்து கொண்டு, 1958-ஆம் ஆண்டு விதி 16(2)ன்படி 50 வயது நிறைவடைய உள்ளதால் வரும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக கூறியுள்ளார்.




தனது கடிதத்தில் “சேவை செய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், வளரவும் எனக்கு வாய்ப்பளித்தற்காக இந்த சேவைக்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். எனக்கு சரியான பாதையை காட்டிய ஹரியானா மாநிலத்திற்கு எனது நன்றி. எனது வாழ்வின் உயர்ந்த இலக்கை அடைய விரும்புகிறேன். புனித துறவிகளான குருநானக்தேவ், சைத்தன்ய மகாபிரபு, கபீர்தாஸ், துளசிதாஸ், சுர்தாஸ், மீராபாய், சூபி துறவிகள் போன்ற எனது மீதமுள்ள வாழ்க்கையை பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்காக அர்ப்பணிக்க உள்ளேன்.“ இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி இறைப்பணிக்கான விருப்ப ஓய்வு பெறுவது அந்த மாநில காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




23 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். அதிகாரியாக வலம் வந்த பார்திஅரோரா தனது காவல்துறை காலத்தில் பல்வேறு சிக்கலான விவகாரங்களை கையாண்டுள்ளார். 2007-ஆம் ஆண்டு சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அப்போதைய ரயில்வே எஸ்.பி.யாக இருந்தபோது விசாரணை மேற்கொண்டனர். 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் ஆண்டு பானிபட் அருகே நடைபெற்ற அந்த குண்டுவெடிப்பில் 68 மக்கள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோனார் பாகிஸ்தானியர்கள்.


2009-ஆம் ஆண்டு அம்பாலா மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு வகித்தபோது, அப்போதைய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும். தற்போதைய மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான அனில்விஜியை கைது செய்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், 2015ம் ஆண்டு தனது மூத்த காவல் அதிகாரியான நவ்தீப்சிங் விர்க் பாலியல் வழக்கில் ஒன்றில் விசாரணையை தடுக்கிறார் என்றும், தனக்கு மிரட்டல் விடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். பார்தி அரோரா 1998ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்தாண்டு மாநிலத்தில் குடிவரவு(இமிகிரேஷன்) மோசடி வழக்குகள் குறித்து இவரது தலைமையிலான அணி விசாரணை மேற்கொண்டது. இதற்காக, நடப்பாண்டில் மாநில உள்துறை அமைச்சகம் பார்தி அரோரா தலைமையிலான அணிக்கு விருது வழங்கியுள்ளது.