SP Office Attack: மணிப்பூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, #IndiaUnderAttack எனும் ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
எஸ்.பி., அலுவலகம் மீது தாக்குதல்:
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை, திடீரென வன்முறை கும்பல் தாக்கியது. இதன் விளைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காங்போக்பியில் உள்ள எஸ்பி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கற்களை வீசி பெட்ரோல் குண்டுகளை வீசியதாக குறிப்பிட்டார். எஸ்பி மனோஜ் பிரபாகருக்கு தலையில் காயம் ஏற்பட்டாலும், அவர் தொடர்ந்து போலீசாரை வழிநடத்தினார். இதனால், நகரத்தில் இரவு முழுவதும் பதற்றம் நிலவியது. மனோஜ் பிரபாகர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள குகி மற்றும் ஜோ சமூக மக்களிடையே, கடந்த செவ்வாயன்று மோதல் வெடித்தது. இதையடுத்து, இரு குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழுவால், மாவட்டத்தில் 24 மணிநேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் தான் எஸ்.பி., அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கலவரமானது எப்படி?
சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பகலில் பெரும் போராட்டம் நடந்தது. அதன்பிறகு, எஸ்பி அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் கூடி, மாவட்டத்தில் உள்ள சைபோல் கிராமத்தில் பல நாள் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு செவ்வாய்கிழமை முதல் நிலைநிறுத்தப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்புப் படையினரை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். கும்பல் அலுவலகத்திற்கு சீல் வைக்க முயன்றது. அது வன்முறைத் தாக்குதலாக மாறியது” என குறிப்பிடுகின்றனர்.
காவல்துறை சொல்வது என்ன?
காவல்துறை வெளியிட்டு அறிக்கையில், ”பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து, வன்முறை கும்பலைக் கலைக்க போதுமான பலத்தைப் பயன்படுத்தினார்கள், மேலும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காங்போக்பி எஸ்.பி., , மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளார். தற்போது கூட்டு பாதுகாப்பு படையினர் நிலைமையை சமாளித்து வருகின்றனர். ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது மற்றும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோக்கள்:
வெள்ளியன்று காங்போக்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், “அதிநவீன ஆயுதங்களை ஏந்திய நபர்கள், முகங்களை மூடியபடி உடைகளை அணிந்து தெருக்களில் செல்கின்றனர். அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. அதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகர் காயமடைந்து தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட காவலர்களை வழிநடத்தி செல்லும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பகிரும் இணையவாசிகள், #IndiaUnderAttack எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
பலனளிக்காத மன்னிப்பு:
கடந்த ஒன்றரை வருடங்களாக மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வருகிறது. கடந்த 31ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பிரைன் சிங், தொடரும் மோசமான சூழலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும், நடப்பாண்டில் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், தற்போது மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.