பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரிக்க  அரசாங்கம் கருதுவதாகவும்,  2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 




பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசாங்கம் கருதுவதாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். பட்ஜெட்டுக்கு பின் நடக்கும் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது என குறிப்பிட்டார். 


மேலும், "பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை நாங்கள் கருதுகிறோம்; உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை இந்தியா அடையும்" என்று பிரதமர் மோடி கூறினார்.


அதேபோல் அந்த உரையில், “இப்போது இந்த வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து, டாப் கியரில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இதில் பிரதம மந்திரி கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் அவர் கூறினார்.


மேலும், “சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார். இது வணிகங்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், தளவாடச் செலவைக் குறைக்கவும் உதவும் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 


இணையவழிக் கருத்தரங்கிற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 3 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. 


மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிதின் கட்கரி, பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள், தொழில் துறையினர், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையவழியில் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.