மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் சாலைகளின் மோசமான நிலையைக் கண்டித்து, பெண்கள் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில் `ரேம்ப் வாக்’ நடந்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். போபாலின் டானிஷ் நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஹோஷங்கபாத் சாலையில் ரேம்ப் வாக் போராட்டம் நடத்திய பெண்கள் அதனைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர். 


கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், டானிஷ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர் சாலையின் மோசமான நிலையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Ae Bhai, Zara Dekh Ke Chalo என்று ‘மேரே நாம் ஜோக்கர்’ படத்தில் வெளிவந்த புகழ்பெற்ற க்ளாசிக் இந்திப் பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து, பெண்கள் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் அழகாக ஆடை அணிந்து ரேம்ப் வாக்கில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த ரேம்ப் வாக் போராட்டம் தொடர்ந்தது.



மக்கள் பிரதிநிதிகள் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இப்பகுதிவாசிகள், `மத்தியப் பிரதேசத் தலைநகர் போபால் இந்தியாவிலேயே சுகாதாரம் என்ற அளவீட்டில் ஏழாவது இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த நகரத்தின் சாலைகள் கிராமங்களில் இருக்கும் சாலைகளை விட மோசமாக உள்ளன’ எனக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் போபால் முனிசிபல் கார்ப்பரேஷன், பொதுப் பணித்துறை அமைச்சகம், தலைநகரத் திட்ட நிர்வாகம் முதலானோரை மோசமான சாலைகளுக்காகக் குற்றம் சாட்டியுள்ளனர். 


இப்பகுதியைச் சேர்ந்த அன்ஷு குப்தா என்பவர், `டானிஷ் நகரில் சுமார் 500 வீடுகள் இருக்கின்றன. இருப்பினும் சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளன. மக்கள் இங்குள்ள பாதாளச் சாக்கடைக்கான குழிகளில் விழுகின்றனர். மாநகராட்சி கார்ப்பரேஷன் சார்பாக வரி மட்டுமே வசூல் செய்யப்படுகிறதே தவிர, சாலைகள் சரிசெய்யப்படுவதில்லை. அதனால் அதிகாரிகளுக்கு எங்கள் பிரச்னை தெரிய வேண்டும் என்று குரல் எழுப்புவதற்காக ரேம்ப் வாக் போராட்டத்தை நடத்துகிறோம்’ என்று கூறியுள்ளார். 



உமா ஷர்மா என்பவர், “நாங்கள் இப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். சாலையின் நிலை கடந்த 30 ஆண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வருகிறது. தெரு விளக்குகள் எரிவதில்லை. சாக்கடை வசதியும் சரியாக இல்லை. மழைக்காலத்தில் இந்த சாலைகளில் எங்களால் நடமாட முடிவதும் இல்லை’ என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 


MPCCI என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேஷ் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான சங்கம் போபால் நகரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுகளையும், குப்பைகளையும் நீக்க அதிக வரி வசூல் செய்வதாகவும், எனினும் குப்பைகளை நீக்குவதில்லை எனவும் குரல் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.