கேரள மாநிலத்தில் புதிய வகை தொற்று உருவாகியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை தொற்றை கேரள மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.


கேரளாவின் கோழிகோட்டில் மேலும் இருவருக்கு ஷிகெல்லா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 
அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் ஷிகெல்லா தொற்று தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தி வருகிறது. 


காரச்சேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவி வருவதால், அங்கு நோய்த் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.


கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் கடந்த மே மாதம் வேகமாகப் பரவியது. 2019ஆம் ஆண்டில் மலப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் முதன்முதலாக வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இந்த வைரஸ் முதன்முதலாக 2006ஆம் ஆண்டில் ஆழப்புழாவில் பதிவானது. பின்னர், 2011ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் பதிவானது.


இதைத் தொடர்ந்து, கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கடந்த ஜூன் மாதம் உறுதி செய்யப்பட்டது. நோரோ வைரஸ் காரணமாக குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
நிஃபா, கொரோனா, ஜிகா, தக்காளிக் காய்ச்சல் என கேரளாவில் அடுத்தடுத்து வைரஸ் தாக்குதல்கள் ஏற்பட்டு வந்தன.


இந்நிலையில், ஷிகெல்லா எனும் புதிய வகை தொற்றின் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. ஷிகெல்லா, என்டோரோபாக்டர் பாக்டீரியா வகையை சேர்ந்தது. இது, மனிதர்களின் குடலில் வசிக்கக் கூடியது. குடலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், வயிற்றுப்போக்கு,வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.


இந்த பாக்டீரியா எளிதில் பரவக்கூடியது என்றும், சிறிய அளவிலான பாக்டீரியா எண்ணிக்கை இருந்தாலே உடல்நலக்குறைவு ஏற்படும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. இது உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்த்தொற்று ஆகும். சரியாக கழுவாத பழங்கள், காய்கறிகள் போன்ற அசுத்தமான உணவை உட்கொள்ளும் போது எளிதில் பரவக்கூடியது.


எப்படி தற்காத்துக் கொள்வது?


உதாரணமாக, உணவைத் தயாரிக்கும் ஒருவர் கழிப்பறை சென்ற பின்னர் கைகளை சரியாக கழுவாத பட்சத்தில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் வழியாக அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புண்டு. அசுத்தமான நீரில் நீந்தினாலும் அல்லது குளித்தாலும் தொற்று ஏற்படலாம்.


உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கழிவறை சென்றுவிட்டு வந்த பிறகு, கைகளை கழுவ வேண்டும். நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் புதியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


பால், கோழி மற்றும் மீன் போன்ற பொருட்கள் எளிதில் பாதிக்கப்படலாம். அவற்றை சரியான வெப்பநிலையில் வைத்து சமைக்க வேண்டும் என டாக்டர் சிங் கூறினார்.


இவ்வாறாக ஷிபெல்லா தொற்று பாதிப்பு ஏற்படாமல் நம்மை நாம் காப்பற்றிக் கொள்ள முடியும்.