பெண்களை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தால் அதுவும் பாலியல் துன்புறுத்தல்தான் என்று மும்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.


சிறுமியை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. "இந்த வார்த்தை ஆண்களால் பெண்களை இழிவான முறையில் பேச பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது பாலியல் ரீதியாக அவர்களைப் புறக்கணிக்கிறது" என்று சிறப்பு நீதிபதி எஸ்.ஜே.அன்சாரி தனது தீர்ப்பில் கூறினார்.


இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டது.


“இதுபோன்ற குற்றங்களை கடுமையாகக் கையாள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற ரோமியோக்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பெண்களின் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளால் அழைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


2015 ஆண்டு அப்ரர் கான் என்பவருக்கு எதிராக சிறுமி ஒருவர் மும்பை காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அப்ரர் கான் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அந்தச் சிறுமி குறிப்பிட்டிருந்தார்.


அந்தப் புகாரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது எனது தலை முடியை பிடித்து இழுத்து "ஐட்டம்" என்று கூறினர். என்னிடம் எங்கு போகிறாய் என்றும் கேட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்ரர் கான், முன்ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி அப்ரர் கான் தரப்பில் மும்பை தின்தோஷி செசன்ஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


அவரது தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி, குற்றவாளி என அறிவித்து தண்டனை விவரத்தை வெளியிட்டார்.


முன்னதாக, கர்நாடக சித்ரதுர்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரை பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததற்காக காவல்துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜி. பி. உமேஷ் என்ற குற்றம்சாட்டப்பட்டவர் மீது அவரது 25 வயது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தப்பி ஓடிவிட்டார்.


பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், தங்கள் குடும்பத்தில் நிலத் தகராறு நிலவி வருவதாகவும், தனது தாயின் வேண்டுகோளின் பேரில் உமேஷ் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு 2017இல் இப்பிரச்னையை தீர்க்க உதவினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை, தான் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்திப்பதற்காக வர சொல்லி இருக்கிறார்.


கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று உமேஷை சந்திக்கச் சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், இல்லையெனில் அவரது குடும்பத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டி உள்ளார். இதையடுத்து, காவல்துறை ஆய்வாளராக உள்ள உமேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.