மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் பெலிஸ்வர் மகாதேவ் கோயில் கிணற்றின் படிக்கட்டு  இடிந்து விழுந்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் சிக்கினர். தற்போது வரை, 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மீட்கப்பட்ட 11 பேரின் உடல்கள்:


அதேபோல இதுவரை, 2 பெண்கள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ராமநவமியை முன்னிட்டு இன்று அதிகப்படியான பக்தர்கள் கோயலில் திரண்டிருந்தனர். இதனால், தளம் பாரம் தாங்கமுடியாமல் இடிந்து விழுந்தது. மீட்பு பணி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், கோயிலில் உள்ள சுவரை ஜேசிபி மூலம் உடைத்து பக்தர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர். இந்தூர் பாஜக எம்பி ஷங்கர் லால்வானி ஏபிபி நியூஸிடம் பேசுகையில், "விபத்து நடந்த இடத்திற்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில்  சேர்ப்பது எங்கள் நோக்கமாக உள்ளது. அது, மிகவும் பழமையான கோயில். ஆனால், அதை விபத்து என சொல்வது கடினம். மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார். 


தொடரும் விபத்துகள்:


சம்பவ இடத்துக்கு வந்த பேரிடர் மேலாண்மை நிபுணர் அஞ்சலி குவாத்ரா கூறுகையில், ஒவ்வொரு முறையும் மத வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதை அரசு ஆராய வேண்டும். மேலும், "மீட்புப் பணியில் அர்சு விரைந்து செயல்பட்டு வருகிறது, நல்ல விஷயம்தான். 


ஆனால், ஒவ்வொரு முறையும் மத வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பது பெரிய கேள்வி? முக்கிய நாட்களில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும் அதற்காக  ஏன் முன்கூட்டியே தயாராகக் கூடாது? விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலான இடம் என்றும் கூறினார்.


 






இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். நிலைமை குறித்த அறிந்து கொண்டேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்" என குறிப்பிட்டுள்ளார்.