நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியா நாட்டிற்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியா நிலநடுக்கம் :


இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162-ஆக உயர்ந்துள்ளது என்று மேற்கு ஜாவா கவர்னர் ரித்வான் கமில் தெரிவித்தார். அந்நாட்டின் முக்கிய தீவான ஜாவாவை உலுக்கி உள்ளது. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 160க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கட்டடங்கள் சேதமடைந்தன.


இதன் தொடர்ச்சியாக, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா வரை, இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அச்சம் காரணமாக, மக்கள் சாலைகளில் அலறி ஓடினர்.  சுமார், 700 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.






"அதிக எண்ணிக்கையில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் அதிக சுகாதார பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.  கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்களில் இன்னும் நிறைய குடும்பங்கள் மீட்கப்படாமல் உள்ளனர்" என்கிறார் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர். நகரத்தில் உள்ள கடைகள், மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய உறைவிடப் பள்ளி ஆகியவை நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சியாஞ்சூரில் உள்ள பல கட்டிடங்கள், அவற்றின் கூரைகள் இடிந்து விழுந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


"இந்தியா துணை நிற்கும்"


இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது, ”இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேஷியா நாட்டிற்கு இந்தியா துணை நிற்கும் என்றும் இந்த நிலநடுக்கதால் பலர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.






உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.