Indigo Flight Crisis: ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இண்டிகோ நிர்வாகம் 610 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளது.
இண்டிகோ விமான சேவை சிக்கல்:
மத்திய அரசு முன்மொழிந்த புதிய விதிமுறைகள் காரணமாக, கடந்த ஆறு நாட்களாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. ஏராளமான விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த பயணிகள்,கடைசி நேரத்தில் திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் தான், இண்டிகோ நிறுவன சேவைகளில் தொடர்ந்து விமான தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என, டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பு சமீபத்திய விமான நிலையை சரிபார்க்குமாறு பயணிகளுக்கு வலியுறுத்தப்படுள்ளது. சிரமத்தைத் தவிர்க்க விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் பயணிகள் புதுப்பித்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் அட்வைஸ்:
இதுதொடர்பாக இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், ”இடையூறுகளைக் குறைப்பதற்கும் சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும் எங்கள் குழுக்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. மருத்துவ உதவி உட்பட உதவி தேவைப்படும் பயணிகள், தகவல் மேசையை அணுகலாம். அங்கு உதவி செய்ய தரை ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையம், விமான நிலையத்திற்குச் சென்று திரும்புவதற்கு வசதியான பயணத்திற்கு டெல்லி மெட்ரோ, பேருந்துகள் மற்றும் செயலி அடிப்படையிலான வாடகை வண்டிகள் போன்ற பல பொதுப் போக்குவரத்து விருப்பங்கள் உள்ளன” என்று விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.610 கோடி இழப்பீடு
இதனிடையே, விமான சேவைகள் ரத்தானதன் விளைவாக ஏற்கனவே டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிக்கு திருப்பி அளிக்க ரூ.610 கோடி பணத்தை ஒதுக்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கிட்டத்தட்ட 3,000 சாமான்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விரைந்து விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
சனிக்கிழமை இருந்த சூழலை காட்டிலும் மேம்பட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று 1650 விமான சேவைகள் இயக்கப்பட்டதாம். இந்த மோசமான சூழலுக்கு முன்பாக இண்டிகோ நிறுவனம் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரத்து 300 விமான சேவைகளை வழங்கி வந்தது. நிறுவனத்தின் 138 இலக்குகளில் 137 இலக்குகளுக்கான சேவைகல் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்திற்கான காரணம் என்ன?
விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம் போன்ற மத்திய அரசின் புதிய விதிகளை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய விமானிகளை பணியமர்த்த தவறியதே இந்த ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் காரணமாக மாறியது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைக் குறைக்க, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக சில விதிகளைத் தளர்த்தியது. அதே நேரத்தில் இண்டிகோவின் தவறான நிர்வாகமே இந்த குழப்பத்திற்கு காரணம் என அரசு குற்றம் சாட்டியது. மேலும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.