தானம் செய்யப்பட்ட இதயம், சுமார் 2.30 மணி நேரத்தில் இண்டிகோ விமானம் மூலம் குஜராத்-மும்பை எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வதோதரா டூ மும்பை
கடந்த வாரம் ஜூன் 7ஆம் தேதி, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமானத்தின் மூலம் இந்த தானம் செய்யப்பட்ட இதயம், வதோதராவைச் சேர்ந்த மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
2 மணி நேரம் 25 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த இதயம், தொடர்ந்து அங்கிருந்த தானம் பெற்ற நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
3 மணி நேரம் காலக்கெடு
பொதுவாக தானம் செய்யப்பட்ட உறுப்புகள் 3 மணி நேரம் மட்டுமே வெளியே இருக்கலாம், குறிப்பிட்ட நேரத்தில் அவை பொருத்தப்படாத நிலையில், இதில் சம்பந்தப்பட்ட அனைவரது முயற்சிகளும் பலனளிக்காமல் சென்றுவிடும்.குறிப்பிட்ட நகரத்துக்குள் தானம் செய்யப்பட்ட உறுப்பை எடுத்துச் செல்வதே பெரும் சிரமமாக உள்ள நிலையில், குஜராத் - மும்பை விமானம் மூலம் இதயம் பயணித்த இந்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்நிலையில், இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா இது குறித்து தனது குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
விமானக் குழுவுக்கு வாழ்த்து
"ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது, ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சி. வதோதரா மற்றும் மும்பையில் உள்ள எங்கள் விமான நிலைய ஊழியர்களையும், இந்த முயற்சியில் பங்களித்த பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்" என தத்தா தெரிவித்துள்ளார்.
இதேபோல், குளோபல் மருத்துவமனையின் மூத்த நிர்வாகி அனூப் லாரன்ஸ், IndiGo வின் 'தன்னலமற்ற ஆதரவுக்காக மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் மே 20ஆம் தேதி இதே போல் இண்டிகோ நிறுவனத்தால் புனே -ஹைதராபாத்துக்கு ஒரு ஜோடி நுரையீரல் வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. அப்போது புனே காவல் துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) ஆகிய குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு நுரையீரல் வெற்றிகரமாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டதா இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்