கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு எதிராக முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த தடுப்பூசிகளின் விலை ரூ.200 முதல் ரூ.400 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், HPV தடுப்பூசிகளின் விலை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் ‘சொ்வாவேக்’ தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ (The Serum Institute of India (SII)) நிறுவனம் தயாரித்துள்ளது. இது, கருப்பை வாய் புற்றுநோய்க்கு ஏற்படுவதற்கு காரணமாக உள்ள ஹியூமன் பாப்பிலோமா கிருமிக்கு எதிராக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 15 முதல் 44 வயதுள்ள பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 2-ஆவது இடத்தில் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது.
முன்னதாக, மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் மேற்கொண்ட தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், தடுப்பூசியை சந்தைப்படுத்தும் உரிமம் சீரம் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பொதுவாக பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில், கர்ப்பபை வாயில் தொற்று ஏற்படும்போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். மற்ற புற்றுநோய்கள் எனில் பாதிக்கப்பட்ட பின்பே மருத்துவ சிகிச்சைகள் வழங்க முடியும்.
பாலியல் உறவின் போது ஹியூமன் பாப்பிலோமா எனப்படும் வைரஸ் தொற்றால் உண்டாகிறது. இதனை பாப் ஸ்மியர் பரிசோதனையின் மூலம் ஸ்கிரீனிங் செய்து கண்டறிய முடியும். பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற சுகாதார பரிசோதனைகளை தேர்வு செய்ய மறுக்கிறார்கள் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். காலதாமதம் செய்வதற்குள் இந்த புற்றுநோய் பரவி தீவிரமடைவதால் இறப்புகள் அதிகமாகின்றன.
யாரெல்லாம் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்?
இளம் வயதினரான 11 - 12 வயதுடைய பெண்களுக்கு HPV தடுப்பூசி போடப்படுகிறது. பாலியல் விவகாரங்களால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது. ஆனால் 70 % வரை மட்டுமே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கும் . ஒருபோதும் பாதிக்காது என்று கூற இயலாது. எனவே தடுப்பூசி செலுத்திய பெண்களும் ஸ்க்ரீனிங்கை தொடர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 13-26 வயதுக்குட்பட்ட பெண்களும் HPV தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு அளவு வேறுபடும். பொதுவாக இளம் வயதினருக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
தடுப்பூசியின் பக்க விளைவுகள்:
பிறப்புறுப்பு சுகாதாரம் மோசமாக இருப்பது தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கான முக்கியமான காரணம். சுத்தத்தை கடைபிடிக்கும் சமூகங்கள் மத்தியில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் இந்த வைரஸை எதிர்த்து போராட முடியும். இருப்பினும் இந்த வைரஸ் பல ஆண்டுகள் வரை ஆக்ட்டிவ் ஆக இருக்கும் என்பதால் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு வழிவகுக்கிறது.